Tuesday, October 18, 2016

உலகாயுதம் என்றால் என்ன?

கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.
 
ஒருபுறம், ‘இது என் தெய்வம், அதன் வல்லமையைக் காண்!’ என்றெல்லாம் பக்தியின் பரவசத்தில் ஒரு தரப்பு, மக்களை வசீகரித்த போது,
 
இன்னொரு புறம் எதையும் கேள்வி கேட்டு,  ‘நீ சொல்வதை அப்படியே நான் ஏன் ஏற்கவேண்டும்?’ என்ற அறிவிற்கே உரிய ஆண்மையோடு மிகச்சிலர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து அவர்கள் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கினர்.

அதுவே .உலகாயுதம்

உலகாயுதத்தின் குரல் – கடவுளைக் கொன்றவனின் குரல்.

கடவுள் இருந்தால்தானே கொல்ல முடியும் ?

அப்படியானால் கடவுள் இருக்கிறார் என்று உலகாயுதர் ஒப்புக்கொள்கிறார்களா என்று கேட்டால், மதவாதம் பேசிச் சமயிகள் படைத்த கடவுளைத் தம் கேள்விக் கணைகளால் கொன்றவர்கள் அவர்கள்.

லோக  அயதாம் என்பதன் பொருள் உலகே நிலை என்பது.

நாம் காணும் இந்தக் காட்சியே முதன்மை. நமது இந்தப் புலன்களால் அறியும் அறிவே அறிவு என்று முழங்கியவர்கள் இவர்கள்.

தம் கொள்கைகளை விளக்கும் தனித்த நூலொன்றை இவர்கள் எழுதவில்லையே தவிர, ( எழுதினாலும் அது ஏற்கப்பட்டிருக்காது என்பது வேறு) அவர்கள் கொள்கைகள் ஆழமானவை என்பதையும் அவற்றை மறுக்க அவைதிக வைதிக சமயங்கள் எந்த அளவுக்குப் போராடி இருக்கின்றன என்பதையும் அந்தச் சமயச் சார்பான நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.

தமிழில் காப்பியங்களும் சைவசித்தாந்த சாத்திரங்களும் ஆங்காங்கு மல்லுக்கட்டிக்கொண்டு இவர்கள் கொள்கைகள் எப்படி எல்லாம் குறையுடையவை என்று காட்டும் இடங்களில் இருந்துதான் நாம் உலகாயுதரின் கொள்கைகளை வடிகட்டிப் பெற முடிகிறது.

நமக்குக் கிடைக்கின்ற காப்பியங்கள் பெரிதும், சமயச்சார்பானவை. அவை ஒரு சமயக் கருத்தினைக் கதைகளின் ஊடாகச் சொல்லவோ அல்லது இன்னொரு சமயக் கருத்தினை மறுக்கவோ எழுந்தவை.

ஆனால் இந்தச் சமயப்பெருமக்கள் மௌனமாய் இன்னொன்றையும் செய்தனர். அது அன்றளவும் இருந்த பொதுவான இலக்கியங்களைத் தொகுத்து, தங்கள் கடவுளின் நாமகரணத்தை அதற்குச் சூட்டித் தம் சமயம் சார்ந்த நூல் போல ஆக்கிவிடுவது.

சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது,  அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களின் முன்னால் ஒட்டப்பட்ட கடவுள் வாழ்த்து முத்திரைகள் இப்படிப் பொதுவான இலக்கியங்களைத் தம் சமயவழிப் படுத்த நினைந்ததன் முயற்சியாகத்தான் படுகிறது. திருக்குறள் இவர்களிடம் சிக்கிப் பட்ட பாடு சொல்லிமாளாது.

பண்டைய காலத்தில் எந்த விதமான ஆதரவும் தங்களுக்கு இல்லாத சூழலில் மக்கள் முன் சமயாவாதிகளிடம் அவர்கள் முன் வைத்த கேள்விகள் என்ன அவர்கள் எப்படிப் பட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருந்தனர் என்பதைப் பற்றியதே இந்தப் பதிவு.

இதன் தொடர்ச்சியாக, பௌத்தம், சமணம் எனப் பண்டைய நம் மரபில் இருந்து இன்று பெரிதும் வழக்கொழிந்து போன சமயக் கொள்கைகள் குறித்தும் சற்றுப் பகிர்ந்திட நினைக்கிறேன். தமிழில், பாடப்புத்தகம் தாண்டி இவற்றின் கொள்கைகள் பற்றி அறிந்திடுதலில் நிறையச் சிரமம் இருக்கிறது. (உலகாயதம் குறித்துப் பாடப்புத்தகங்களில் இருக்கிறதா எனத் தெரியவில்லை)

சிந்தாமணியைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உ.வே.சாமிநாத ஐயர், அதில் கூறப்பட்ட சமணக் கருத்துகள் புரியாமல் எந்த அளவிற்குத் திண்டாடினார் என்பதை  அவரது என் சரித்திரத்தில் கூறியிருப்பார்.

தமிழ் இலக்கிய, இலக்கண வாசிப்பில் அக்காலத்தில் நிலவிய வைதிக அவைதிக சமய மறுப்புக் கொள்கைகளின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை அவதானிக்க, அவை பற்றிய புரிதல் உதவும் என்கிற நோக்கில் இப்பதிவுகளை அமைக்கிறேன்.

அன்றி,

இங்குச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் எனது கருத்தல்ல. இக்கருத்தினோடு எனக்குள்ள உடன்பாடு மற்றும் உடன்பாடின்மை என்பது என்னோடு இருக்கிறதே அன்றி அதை ஒரு சார்பாய் இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படுத்திடவில்லை.

இந்தப் பதிவை எழுதி நீண்டநாள் ஆன பின்பும், இத்தயக்கத்தினால்தான், இதை வெளியிடத் தாமதித்தேன்.

சரி இனி உலகாயதரின் கொள்கைகளுக்கு வருவோம்.
அழியாமல் என்றும் இவ்வுலகில் இருப்பவை நிலம் , நீர், நெருப்பு, காற்று என்பவையாகும். இதன் இயல்புகள் முறையே, திண்மை, தண்மை, வெம்மை, சலனம் என்பன. இவை குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட சூழலில் சேர்வதனாலேயே உலகில் நாம் காணும் எல்லாப் பொருட்களும் தோன்றுகின்றன. உயிர்களை எடுத்துக்கொண்டால் இந்த நான்கின் கூட்டத்தில் பிறந்த உயிரின் வளர்ச்சி  நிலையில் ஐம்புலன்களும், அவற்றின் உணர்ச்சியும், அறிவும் தோன்றுகின்றன.

பூதங்களின் சேர்க்கையால் தோன்றுபவை உடலும் உயிரும் என்பதால் அவற்றிற்கு அழிவும் உண்டு. இந்தச் சேர்க்கை குலையும்போது அவை அழிந்து போக ஆரம்பிக்கின்றன. பின் அத் தோற்றத்திற்கு முன்பு இருந்த நிலையை அடைகின்றன. ( பஞ்ச பூதங்கள் என்று நாம் இன்று சொல்லித் திரிவதில் ஆகாயத்தை உலகாயதர் ஏற்கவில்லை. இன்றைய அறிவியலும் ஆகாயம் என்ற ஒன்று இல்லை என்று சொல்வதைப் பார்க்க வேண்டும்)

உயிர் முதலில் தோன்றுகிறதா உடல் முதலில் தோன்றுகிறதா என்ற கேள்விக்கு அவர்களின் பதில் உடல்முதலில் தோன்றுகிறது என்பதுதான். உடல் தோன்றிய பின்னர்தான் உயிர் தோன்றுகிறது என்பதே அவர் கருத்து.

இந்த நான்கு பூதங்களையும் பற்றி அவர்கள் சில கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.

நாம் காண்பனவற்றில்,

பூதங்களே நிலையானவை.

அவை யாராலும் படைக்கப்பட்டவை அல்ல.

யாதொன்றின் துணையில்லாமல் ஒன்றோடு ஒன்று கலத்தல் அந்த பூதங்களின் அடிப்படை இயல்பு ஆகும்.

அந்தக் கலத்தலின் தன்மை, வேறுபாடு இவற்றின் அடிப்படையிலேயே உலகில் பொருட்களும் அவற்றின் இயல்புகளும் உண்டாகின்றன.

‘அது எப்படி வெவ்வேறு தன்மைகள் சேர்ந்து முற்றிலும் வேறான ஒன்றாக மாறமுடியும்?’ என்று கேட்பவர்களுக்கு உலகாயுதர் காட்டும் உதாரணம், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும்.

வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் வெவ்வேறு நிறத்தில் இருந்தாலும் அவை கூடும் போது சிவப்பு நிறம் உண்டாவது போல வெவ்வேறு தன்மையை உடைய இந்தப் பூதங்களின் சேர்க்கையில், புதிய பண்புகளை உடைய சடமும் உயிரும் இதுபோற் பிறவும் பிறக்கின்றன என்று பதிலளிக்கிறார்கள் அவர்கள்.

இதற்குமுன் அளவைகள் பற்றிய பதிவைப் பார்க்காதிருந்தால், அதைப் பார்த்துவிட்டுத் தொடர்வது இனித்தொடர்வதன் புரிதலுக்கு உதவியாக இருக்கும்.

அவர்கள் வெறும் பிரதியட்சப் பிரமாணத்தை மட்டுமே கொண்டு, ஏனையவற்றை மறுக்கின்றனர் என்று அவர்களது கொள்கைகளைக் குறுக்கிக் காட்ட முற்படும் சமயவாதிகள், அவர்கள் காரண காரியங்களுங்கு உட்பட்ட பொதுவிதிகளை ஏற்றுக் கொண்டதை வசதியாக மறைப்பர்.
உங்கள் அனுமானங்களை எல்லாம் ஏற்க முடியாது  என இறை கொள்கையுடையாரிடத்து உலோகாயுதர் கூறுவது, காட்சி அளவைக்கு உட்படாத நம்பிக்கை மட்டுமே சார்ந்த அனுமானங்களையும், வேதம், சுருதி பிரமாணங்கள் முதலியவைகளுமே.

நாம் காணும் காட்சிகள் ஆறுவிதமானவை.

1)   ஐயக்காட்சி – இதுவா அதுவா என்று தீர்மானமற்ற அறிதல். பாம்பா கயிறா அங்கு கிடப்பது என்று எண்ணித் துணியாத நிலை.

2)   வாயிற்காட்சி – புலன்களின் வாயிலாக நாம் பெறும் அறிவு. உதாரணமாகக் கண் என்னும் புலன் வாயிலாக நாம் காணும் காட்சிகளைக் கொள்ளலாம்.

3)   விகற்பக்காட்சி- புலன் வாயிலாக நாம் காண்பனவற்றின் இனம், தன்மை போன்றவற்றை அறிந்து கொள்ளுதல். தீ என்பதைப் பார்க்கும் போது அதன் இயல்பு சுடுதல் என்று அறிவது  இவ்வகைக் காட்சியாகும்.

4)   அந்வயக்காட்சி - புலன்களை வாயிலாகக் கொண்டு பகுப்பது. உதாரணமாக, கண்ணால் காணும் பொருட்களை இது முக்காலி , இது நாற்காலி என வேறுபடுத்தி அறிவது

5)   வெதிரேகக்காட்சி - புலன்கள் வாயிலாகக் கொண்டவற்றைப் பகுத்து, அவற்றிலிருந்து புதிய உண்மைகளை அனுமானித்தல். (நாம் இன்று மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கெல்லாம் இதுவே அடிப்படையாவது.)

6)   திரிவுக் காட்சி – ஒன்றை இன்னொன்றாய் நினைத்து மயங்குவது.
இருளில் மரத்தை மனிதனாய்  நினைப்பதைப் போன்றது.

இவை அனைத்தும்  வாயிற்காட்சியை அடிப்படையாகக் கொண்டு அனுமானிப்பதற்கு உதவும் பகுப்புகளாகும்.

கடவுளை வலியுறுத்துவோர், நிர்விகற்பக் காட்சி என்று ஒன்றை வலியுறுத்துவார்கள். நிர்விகற்பக் காட்சி என்பது, ஒன்றின் குற்றத்தைக் காணாமல் குணத்தை மட்டுமே காண்பது.

இதை வைத்துக் கொண்டு எப்படி உண்மையைக் காண முடியும் என்று வாதிடும் உலகாயதர், குற்றத்தையும் குணத்தையும் காணும் விகற்பக் காட்சியை ஏற்றுக் கொள்கின்றனர். இதுதான் உலக இயல்பினைக் கண்டு, கடவுளைக் குறித்த கேள்விகளை எழுப்ப அவர்களைத் தூண்டுவதாய் அமைவது.

சமயிகள் கூறும் கன்மம், உயிர், இறைவன் என்பதை உலோகாயதர் ஏற்கவில்லை.

1)   ஒருவன் செய்த வினை அவன் இறந்தபின்னும் அவனைத் தொடரும் என்பது அபத்தம்.

2)   உயிர் என்பது உடலுக்குரிய ஒரு பண்பு. அது அழியாது என்பது பொய்.
உடலின் தொடர்பால் தோன்றும் உயிர் உடல் அழிந்ததும் தானும் அழியும் இயல்பினை உடையது.

3)   உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு, விளக்கிற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பினைப் போன்றது. விளக்கு இல்லாவிட்டால் ஒளி இல்லை.

4)   நன்மை தீமை என்பன ஊழ்வினையால் விளைவன அல்ல. அவை தொடரவும் தொடரா. அவை இயற்கையின் விளைவுகளே ஆகும்.

பூதங்கள் நிரந்தரமானவை
அவை தாமாகவே இயங்கும் இயல்பினை உடையவை.

எனவே அவற்றை இயக்கும் இறைவன் என்றொருவன் இல்லை.

அறிவென்பது பூதங்களின் சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றி அறிவதே

இறைவன் உருவமற்று அருவே உருவானவனாய் ( உருவம் இல்லாதவனாய் ) இருக்கிறான் என்பது சமயிகளின் கட்டுக்கதை.

இறைவனுக்கு  உரு இருக்கிறது என்பதையும் உலகாயதர் ஏற்பதில்லை.

அப்படி இறைவனுக்கு உரு இருந்தால் அதுவும் பூதங்களின் சேர்க்கையால் உருவானதே ஆகும். அப்படி உருவான கூட்டம் நிச்சயம் அழிவிற்குரியது. எனவே உருவின் தோற்றம் எப்படியோ அப்படியே அதன் அழிவும் உறுதிப்படுகிறது.

இறைவன் உருவும் அருவுமாய் இருக்கிறான் என்றால், இருளும் ஒளியும் ஒரே இடத்தில் எப்படி இருக்க முடியாதோ அதுபோல இரண்டு முரண்பட்ட பண்புகள் ஓரிடத்தில் இருக்கமுடியாது எனக் கூறி அதை மறுப்பர் உலகாயதர்.

இதை எல்லாம் கேட்டுச் சும்மாவா இருப்பார்கள் சமயிகள்..?

அவர்கள் கேட்கிறார்கள் “வினை…. வினைப்பயன் இல்லை என்றால், ஏன் ஒருவன் ஏழையாகப் பிறக்கிறான்…? இன்னொருவன் பணக்காரனாய் இருக்கிறான்..? ஒருவன் உடற்குறைபாட்டுடன் பிறக்கிறான். இன்னொருவன் ஆரோக்கியத்துடன் பிறக்கிறான்..?

இவ்வேறுபாட்டுகளுக்கு முன்வினையன்றிக் காரணம் என்ன….?

உலகாயதன் தன் கைவிரல் ஐந்தினையும் விரித்துச் சிரித்துக் கொண்டே சொல்கிறான்,

“ஆம் இந்த ஐந்துவிரல்களுள் ஒவ்வொன்றும், சென்ற பிறவியில் வெவ்வேறு கன்மங்களைச் செய்திருக்கின்றன.

அதனால்தான் ஒவ்வொன்றும் வேறுபாட்டுடன் அமைந்திருக்கின்றன..!”

இதை எப்படிச் சமயிகள் மறுக்கின்றனர்…?

இதுமட்டுமன்று, இன்னும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பிச் சமயவாதிகளைத் திகைக்கச் செய்ததொரு அறிவுப் புலம் நம்மிடையே இருந்திருக்கிறது என்பதையும் சமய நூல்கள் சொல்லும் ஒரு சில செய்திகள் வாயிலாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் இதன் உச்சகட்ட சோகம்.

No comments:

Post a Comment