Thursday, June 30, 2016

அழகியல் : ஒரு மெய்யியல் பகுப்பாய்வு

அறிவுப்பூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவது, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. எனவே தான் மெய்யியலானது அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்குமான பொதுவான முறையியல் அடிப்படைகளைத் தருகின்றது. முறையியல் என்பது விஞ்ஞானப் பூர்வமான அறிவைப் பெறுவதற்குரிய கருவியாகும். புராதன காலம் முதலே அழகியலும் மெய்யியலின் ஒரு பிரிவாகவே வளர்ந்து வந்துள்ளது.
அழகியல் ஆங்கிலத்தில் Aesthetics எனப்படுகின்றது. Aesthetics என்னும் சொல் Aisthetickos என்கின்ற கிரேக்க சொல்லை வேர் சொல்லாகக் கொண்டு உருவானது. கிரேக்க சொல் உணர்திறன், புலனுணர் திறன் (Sense Perception) என்று பொருள்படும். Aesthetics என்னும் சொல்லை முதன்முதலாக பிரடரிக் ஊல்ஃப் என்னும் பிரஞ்சு மெய்யியலாளரின் மாணவரும், ஜெர்மன் தேசத்து கலைக்கொள்கையாளருமான அலக்சாண்டர் பாம்கார்ட்டன் (Alexander Baumgarten; 1714-1762) என்பவரினால் பயன்படுத்தப்பட்டது. அவர் aisthetica என்னும் நூலை எழுதினார். அதன் முதற்பாகம் 1750ல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து இந்தச் சொல் விஞ்ஞான அறிவின் ஒரு துறையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படலாயிற்று. இவரது காலப்பகுதியிலிருந்தே எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் அழகியல் என்பது Aesthetics என்ற பெயரினால் வழங்கப்பட்டது. ஆனால், இதை வைத்துக் கொண்டு, விஞ்ஞான ரீதியான அழகியல் பாம்கார்ட்டன் காலத்திலிருந்துதான் தொடங்கியது என்று எந்த விதத்திலும் பொருள் கொண்டுவிடக் கூடாது. அதன் தொடக்கம் நம்மைத் தொன்மை காலத்துக்கே அழைத்துச் செல்கின்றது.
அழகியல் குறித்த விசாரணைகள் புராதன கிரேக்க காலத்திலிருந்தே பரீட்சயமானவை. ‘அழகு என்றால் என்ன என்று சொல்வாயா?’ என்றார் சோக்ரட்டீஸ் (469-399 BC). இந்த வினாவுக்கான தேடல் இன்றும் தொடர்கின்றது.
உலகில் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர்தலே, அழகியலுக்கு அடிப்படை என்று பிளேட்டோ (428-347 BC) கருதினார். அழகினை எடுத்துக் காட்டும் பொருட்கள் எல்லாவற்றிலும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அழகுடைய பொருட்களில் ஈடுபட்ட பின் அழகிய அமைப்புகளில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்குப்பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கும் அமைப்பும் அழகுக்கு அடிப்படையானவை. இக்கருத்துக்களை பிளேட்டோவின் ‘சிம்போசியம்’ என்னும் நூலிற் காணலாம்.
கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்யியல் கோட்பாடுகள் அழகியலுக்கு அடிப்படையாக அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத்தில் அல்லது ஒலியில் சித்தரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்போல் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுத்தத்துவம் இருத்தல் வேண்டும். இக்கருத்தையே அரிஸ்டோட்டில் (384-322 BC) வற்புறுத்தினார்.
காண்ட் (1724-1804) போன்ற மெய்யியலாளர்கள் பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக்கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப்படல் வேண்டும் என்றும் கூறினார்கள் (வாழ்வியற் களஞ்சியம் ; தொகுதி ஒன்று ; 1991 : 894).
ஹெகல் (1770-1831) முதன்முதலில் ‘அழகியல்’ என்ற சொல்லை அதற்குப் பயன்படுத்தப்படும் பொருளில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு முன்னர், காண்ட் கூட ‘அழகியல்’ என்ற சொல்லை ‘புலன் அறிவு’ என்ற வகையிலேயே பயன்படுத்தினார். ஹெகல் அதனை அழகியல் கோட்பாட்டுத் தொடர்புடைய ஆழமான கருத்தில் பயன்படுத்தினார்.
காண்ட் மெய்யியல் பற்றிக் கூறிய பல கருத்துக்கள் அழகியல் வரலாற்றிலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவர் தன்னுடைய ‘தீர்ப்புக்கள் பற்றிய விமர்சனம்’ என்ற நூலில் கூறும் பல கருத்துக்களை மேலும் தெளிவாக ஆழமான கருத்தோடு ஹெகல் முன்வைக்கின்றார். குறிப்பாக உயர்ந்த ரசனைப் பற்றிய கருத்தில் பகுப்பாய்வு, சார்பற்ற அழகு, அகநிலை சார்ந்த பொதுமை, கடந்த நிலைப்பகுப்பாய்வு போன்ற காண்ட் உடைய எண்ணக் கருக்களுக்கூடாக ஹெகலும் தனது கருத்தை எடுத்துக் கொண்டார். காண்ட் உடைய அழகியல் பற்றிய கருத்து அகநிலை சார்ந்த அனுபவத்தின் பொதுமையாக வெளிப்படுகின்ற போதிலும், அவற்றுக்கான அறிவியல் சார்ந்த அல்லது புலச்சார்பற்ற கூறுகளை வெளிப்படுத்துவதிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஹெகல் அதனை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இயங்கியல் வாத அடிப்படையில் அறிவியலுக்கூடாக வெளிப்படுத்தினார். காண்டின் அகநிலைசார்ந்த உய்த்தறிமுறை ஹெகல் உடைய இயங்கியல் வாத மெய்யியல் அமைப்புக்குள் புறநிலை சார்ந்த கருத்துவாதமாக வெளிப்படுகிறது. அதனுடைய மெய்யியல் அமைப்பின் உள்ளார்ந்த பகுதியாகவே அழகியல் அமைகின்றது.
மார்க்சிய அழகியலின் தோற்றமானது, அழகியல் வரலாற்றிலும், கலை விமர்சனத்திலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திற்று. மனிதனின் உலகு பற்றிய அழகியல் உணர்திறனைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தொகுத்தளிக்க மார்க்சிய அழகியல் உதவுகிறது. இந்த விதிகள் பூரணமாகவும், முழுக்க விரிவாகவும் கலைகளில் தான் வெளிப்படுகின்றன என்று எடுத்துச் சொல்லும் போது, முதன்மையாக அழகியல் என்பது கலையின் சாராம்சம். கலையின் அடிப்படை விதிகள், கலைப்படைப்பாக்கத்தின் இயல்பு ஆகியவை பற்றிய விஞ்ஞானமாக அமைகின்றது. இவ்வாறு அழகியலைப் புரிந்துகொள்ளுதலின் பல்வகைப்பட்ட வெளிப்பாடுகளின் அனுபவங்களை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்துகிறது. இருத்தலுக்கான போராட்டத்தில் மார்க்சிய அழகியல் தற்போது ஓரு முக்கிய களமாகும்.
மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றிய கோட்பாடுகளைத் தனியாக வகுத்துக் கொடுக்கவில்லை. மார்க்சியத்தின் அடிப்படையான இயக்கவியல், வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டும், மார்க்சிய மூலவர்கள் அழகியல் பற்றி அவ்வப்போது உதிரியாகக் கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே மார்க்சிய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது.
மனித இருப்புக்கு ஓர் அழகியல் பரிமாணம் உண்டு என்றும் இது வரலாற்றுரிதியாக வளர்ச்சி பெறுவது என்றும், மனிதப் புலன்கள் விலங்குகளின் புலன்களிலிருந்து வேறுபட்டு மனிதத்துவம் அடைவது. வான்கோவின் மஞ்சளையும் ஆரஞ்சுப் பழத்தின் மஞ்சளையும் வேறுபடுத்திக் காண்கிற கண், கல்யாணி ராகத்தில் ஓர் அபசுரம் தட்டினால் புரிந்துக் கொள்கிற காது, சுவைப்பதன் மூலமாக ஒவ்வொருவகைத் தேனீரையும், மதுவையும் வேறுபடுத்திக் கொள்கிற நாக்கு, குழந்தையின் மிருதுத் தன்மையையும், பூவின் மென்மையையும், பட்டின் மென்மையையும் தொட்டு உணரும் சருமம், குழப்பமான வாசனைகளிலிருந்து பெட்ரோலின் நெடியை, எரியும் ரப்பரின் நாற்றத்தை, அத்தரின் மணத்தை வெவ்வேறாகச் சொல்லும் மூக்கு. இவை உருவாவது மனிதவயப்படுத்தப் பட்ட இயற்கை மூலமாகவே என்றும் மார்க்ஸ் கண்டடைகிறார். முதலாளித்துவ சமூகத்தின் வரலாற்று, பொருளாதாரச் சுழலில் சிதிலமடைந்த மனிதனை மீண்டும் ஒருமுறை முழுமையானவனாகக் காணும் முயற்சியில் தான், மனித இருப்பில் அழகியல் துறையின் மையமான பங்கை அவர் புரிந்து கொண்டார். மனிதன் ஒரு படைப்பாளி என்பதனாலேயே உலகத்தை அழகுமயமாக்காமல் இருக்க அவனால் முடியாது.
‘புலன்கள் தமது செயல்பாடுகளில் நேரடியான தத்துவஞானிகளாக மாறிவிடுகின்றன. மனிதனின் சுயக் கண்ணோட்டத்திலிருந்து அழகியல் உணர்வு உண்டாகின்றது’ என்று “1844 – பாரீஸ் கையெழுத்துப் படிகள்” நூலில் மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் (சச்சிதானந்தன் ; மார்க்ஸிய அழகியல் : ஒரு முன்னுரை ; 1985 : 18,22).
அழகியல் துறைப்பிரச்சினைகள் பற்றி மலையளவு நூல்கள் எழுதப்பட்டுள்ளன; எழுதப்படுகின்றன. ஜர்மனிய அழகியல் வாதிகள் (Aestheticians) தங்களுக்கே உரியவாறு வித்தியாசமான கோணங்களில் அழகியலை ஆராய்ந்துள்ளனர். ஆங்கிலய, பிரான்சிய அழகியல்வாதிகள் தங்களுக்கே உரிய நூறு வித்தியாசமான வழிகளில் இப்பிரச்சினையை அணுகியுள்ளனர். காண்ட், ஷெலிங், ஹெகல், ஷோபனவர், றேபட், ஸ்பென்சர் முதலான முன்னணி மெய்யியலாளர்கள் தமக்குரியதனிப்பட்ட சித்தாந்தங்களை இத்துறையில் தந்திருக்கின்றனர் (பார்க்க, எம்.எஸ்.எம்.அனஸ் ; ‘அழகியல் பற்றி அல்-கஸ்ஸாலி’ ; அல்-அக்ஸா வெள்ளி விழா மலர் ; 1980).
வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அவதானிக்கின்ற பொழுது, அழகியல் என்பது கலைத்துறையுடன் சம்பந்தப்பட்ட ஒரு கலைச்சொல்லாகவே (Technical Term) பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. கலை- இலக்கிய அனுபவங்களின் கோட்பாடு ரீதியான பொதுமைப்பாடே அழகியலாகும். கலை – இலக்கியங்களை விமர்சன ரீதியில் ஆராய்வதற்குரிய சாதனமாக அழகியல் உள்ளது என்று பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா ‘விமர்சன மெய்யியல்’ (1989:23) நூலில் குறிப்பிடுகின்றார்.
தமிழில் அழகியல் என்பது அழகை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஓர் கற்கை நெறியாகவே கொள்ளப்படுகின்றது. ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ (1992:52) அழகியல் என்பதை “(கலைகளில்) அழகைப் பற்றிய கொள்கை” என்றே சொல்கின்றது. அழகியல் என்பது அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும் ஆகும் என்ற கருத்தே பொதுவாக முன்வைக்கப் படுகின்றது.
அழகு பற்றிய கருத்துக்களும் உணர்வுகளும்தான் அழகியல் என்று கூறுவது பொருத்தமானது அல்ல. அழகுணர்வையும், அழகியலையும் நாம் பிரித்துப்பார்க்க வேண்டும். ஆங்கிலத்தில் Aesthetic, Aesthetics உள என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. முதலாவது பெயரடை. இரண்டாவது பெயர். இவை இரண்டுக்கும் நிகரான சொல்லாகவே அழகியல் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப் படுகின்றது. இது பெயரடையாகவும் பெயராகவும் வழங்குகின்றது.
ஆங்கிலத்தில் Aesthetics என்பது பொதுவாக கலை பற்றிய மெய்யியல் (Philosophy of Art ) என்று வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு தனி ஆய்வுத்துறை ஆகும். கலைபற்றிய எல்லா பிரச்சினைகளையும் இது உள்ளடக்குகின்றது. கலை என்றால் என்ன, கலை எவ்வாறு தோன்றுகின்றது, கலையின் பயன்பாடு என்ன, கலையின் பண்புக்கூறுகள் யாவை போன்ற கலையின் பல்வேறு விடயங்களை இது ஆராய்கின்றது. இவ்வகையில் கலைக்கோட்பாடு (Theory of Art) என்பதும் அழகியல் என்பதும் ஒன்றுதான்.
Aesthetic என்பது கலை அம்சம் அல்லது கலைத்துவம் (Artistic), அழகுணர்வு ( sense of beauty) என்ற பொருளில் வழங்குகின்றது. கலைத்துவமும் அழகுணர்வும் ஒன்றல்ல. அழகுணர்வு என்பது பொதுவானது. நமது அழகு பற்றிய உணர்வினை அது குறிக்கும். கலைத்துவம் என்பது குறிப்பானது. அது கலையோடு சம்பந்தப்பட்டது. கலையின் படைப்பாக்கம் அல்லது செய்நேர்த்தி பற்றியது. கலை இலக்கிய விமர்சனத்தில் இந்த இரண்டாவது பொருளிலேயே அழகியல் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது (விரிவான விளக்கத்துக்காக பார்க்க, எம்.ஏ.நுஃமான் ; ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ ; 1987 : 74 – 83).
அழகியல் என்பது கலை ஏற்படுத்தும் பாதிப்பும் அப்பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் கலைஞன் கையாளும் வழிமுறைகளும் அவை சம்பந்தமான கொள்கைகளும் ஆகும். எனவேதான் அழகியல் கலைக்குரிய ரசனையின் இயல்பைப்பற்றி ஆராய்கின்றது.

அழகியல் பற்றி மெய்யியல் பார்வை


 யாராவது உங்களபார்த்து அழகுகும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லனு சொல்லிட்டாங்களா? கவலை உதரி தள்ளிட்டு இதை வாசித்து பாருங்களேன்.... உண்மை புரியும். சரி சரி யோசிங்க ஆனால்...இவன் இயம்புவதையும் கொஞ்சம் கேட்டால் என்னவாம்... இன்று அழகு பற்றி பார்ப்போமா? ? நாம எல்லாரும் சில விடயங்களை தெரியாமலே பண்ணிக்கொண்டு இருக்கின்றோம் . அது தெரியுமா உங்களுக்கு? அது தெரிஞ்சா ஏன் இங்கு இருக்கிறம் அப்படினு சொல்லுறது எனக்கு விளங்குது.. பார்கிற எல்லாவற்றையும் சிலர் வாவ் !எவ்வளவு அழகு ! என்று வியப்பார்கள்...நான் கேட்கிறன் அழகு என்றால்.. என்ன.. அவலட்சணம் என்றால் என்ன? எப்படி ஒன்றை பார்த்து அழகு என்று கணிப்பிடுவது...இப்படி எப்போதாவது யோசித்துள்ளீர்களா...... இந்த அழகு என்ற பதத்திற்கு நமது மெய்யியல் வாதிகள் என்ன சொல்லிறுக்காங்க என்று பார்ப்போமே . . .

அழகிற்கு அங்கிகரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஒரு தனிக் கொள்கை கிடையாது. அழகு எனும் பதம் மயக்கம் தருவதாகும். ஒழுக்கவியல், அளவையியல் பெளதீக அதீதம், அறிவாராட்சி போன்ற துறைகளை போலவே அழகியல் பிரச்சனைகளும் காலம் காலமாக ஆராயப்பட்டு வருகிறது 18ம் நூற்றாண்டுவரை அழகியல் என்ற பதம் கலைப்பற்றிய மெய்யியலாளர்களின் கட்டுரைகளில் இடம்பிடிக்கவில்லை. 1970ல் பவுன் கார்த்தே என்பவரை முதன் முதலில் கலை என்ற சொல்லுக்கு அழகு எனும் பதத்தை பயன்படுத்தினார். இங்கு அழகியலை மெய்யியல் ரீதியா ஆராயவுள்ளது எனவேதான் அழகியல் மெய்யியல் எனப்படுகிறது. இதனை கலைழகு பற்றிய தேடல் என்பர். காட்சிகளாலும் கற்பனைகளாலும் பெறக்கூடிய அநுபவமே அழகு. அழகை வெளிப்படுத்துவன கலைப்பொருட்கள். அழகு ரசணை உணர்ச்சி போன்ற விடயங்களுல் அடங்கும். அஃதாவது அழகு பார்க்கின்ற பொருளில் உள்ளதா ? அல்லது பார்ப்பவருடைய நோக்கில் உண்டா? அழகு எவ்வாறு மதிப்பி்டப்படுகின்றதென ஆராய்வதே அழகியல் மெய்யியலாகும்.

அழகு பார்ப்பவரின் நோக்கிலில்லை, பார்க்கின்ற பொருளிளே உள்ளதெனக் கூறிக்கொள்ளலாம் காரணம் ச்சா . . அந்தப் பெண் எவ்வளவு அழகு, இந்த ஓவியம் எவ்வளவு அழகு, இந்த காட்சிஅழகே இல்லை, அவளிற்கும் அழகிற்கும் சம்பந்தமேயில்லை என கூறுவதை கேட்டிருக்கின்றோம். இங்கு ஒருபொருள் அழகானது என்பதற்கும், அழகற்றது என்பதற்கும் ஒரே மதிப்பீட்டு கொள்கையினால் தீர்மாணிக்கப்படுகிறது. எனவே அழகின் மதிப்பீட்டு கூற்றுக்கள் புறநிலை தன்மை வாய்ந்தது.

சரி முடிவா என்னத்தான சொல்ல வாறிங்க அப்படித்தானே கேட்குறீங்க ? ? சொல்லுறன் கேளுங்க . . அழகு என்பதற்கு வரைவிலக்கணம் கூறமுடியாது...உங்க மொழில சொன்னால் ..அத விவரிக்க வார்த்தை இல்லீங்க. அப்படி வார்த்தைகளை தேட முடிந்தால் நீங்கள் ஒரு சிந்தனைவாதி அத்தோடு ஒரு மெய்யியல்வாதி என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்....

Wednesday, June 29, 2016

அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கான முறைகள்

புராதன காலத்திலிருந்து நவீன காலம் வரை அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள் தொடர்பில் சிந்தனையாளர்களும்,கோட்பாட்டாளர்களும் கவனம் செலுத்தி வந்துள்ளார்கள். இவ்வகையில் அரிஸ்டோடில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், மொண்டெஸ்கியு, மில், மாக்ஸ், லூயிஸ், கொம்ரே, பிறைஸ், வெபர், பொலொக், வொஜ்லின், கால்பொப்பர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அணுகுமுறை என்பது ‘குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த பார்வையும், விளக்கமும்’ எனப் பொதுவாகக் கூறலாம். அணுகுமுறையானது உள்ளுர் பிராந்திய, தேசிய. சர்வதேச அரசியல் நிகழ்ச்சிகளை மிகவும் சிறியதாக்குவதாகலாம். அல்லது பரந்தளவிலான கருத்தினை அதாவது முழு உலகினையும் ஒரு பொருளாக்கி கூறுவதாகவும் இருக்கலாம். மறுபக்கத்தில் கல்விசார் நோக்கிலான கருதுகோள்களை ஆய்வு செய்வதற்காக திரட்டப்பட்டதும், தெரிவு செய்யப்பட்டதுமான தகவல்களை புலனாய்விற்குற்படுத்துவதாகவும் இருக்கலாம். எனவே அணுகுமுறை என்பது “அரசியல் யதார்த்த அறிவினை விசாரணை செய்வதற்கான மனித மனத்தின் மதிநுட்பமான தொழிற்பாடாகும்” எனக்கூறலாம். அரசியல் விஞ்ஞானத்தினை விளங்கிக் கொள்வதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பல அணுகுமுறைகள் உள்ளன. இவற்றில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்குகின்றனர். ஒன்று மரபு சார்ந்த அணுகுமுறை, இரண்டாவது நவீன அணுகுமுறை ஆகும்.மரபுசார்ந்த அணுகுமுறையானது வரலாற்று விபரணமாகவும், சட்ட இயல்பு, பெறுமானம், இலக்கு என்பவைகளையும் கொண்டதாகும். இம் மரபுசார்ந்த அணுகுமுறையில் வேறுபட்ட பலவகையான அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

வரலாற்று அணுகுமுறை
கல்வியாளர்கள் வரலாற்றினை மரபுசார் பண்பினூடாகவே நோக்குகின்றனர். மனிதன் எவ்வாறு இருந்தான், எவ்வாறு கருத்தினை ஒழுங்கமைத்தான், எவ்வாறு தனது நலன்கள் யாவற்றையும் பெற்றுக் கொண்டான், அரசு எவ்வாறு தோன்றியது என்பன போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றன. அரசியல் பற்றிய கல்வியில் தனிமனிதனின் சிறந்த நடத்தை, உள்ளெண்ணங்கள் என்பன வரலாற்றில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தின என்பது ஆராயப்படுகின்றது. சமூகப் பொருளாதார முரண்பாடுகள் எவ்வாறு அரசியல் கோட்பாடுகளாயின, இம்முரண்பாடுகள் சிந்தனையாளர்களை எவ்வாறு பெரும் சிந்தனையாளர்களாக்கியது போன்ற விடயங்களும் வரலாற்றினூடாகவே உணரப்பட்டன. மாக்கியவல்லி, மொண்டெஸ்கியூ, செவிக்னி, மெயின், பிறிமன், லஸ்கி போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தமது ஆய்வுகளுக்கு வரலாற்று அணுகுமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள். கால்மாக்ஸ் முதலாளித்துவ சமுதாயம் வரலாற்றினூடாக தோற்றம் பெறுவதை விளக்குவதற்கு வரலாற்று அணுகுமுறையினையே பயன்படுத்தியிருந்தார். இதனை இவர் “வரலாற்றுப் பொருள் முதல்வாதம்” எனப் பெயரிட்டு அழைத்திருந்தார். சிஜ்விக் வரலாற்று அணுகுமுறை தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்.
“வரலாற்று அணுகுமுறை நிகழ்கால எதிர்காலத் தேவைகளைத் தீர்ப்பதற்குப் பங்களிப்புச் செய்யமாட்டாது. பதிலாக, சமூகத்தில் எவ்வகையான அரசியல் நிறுவனங்கள் இருந்தன, அதன் செயற்பாடுகள் எத்தகையதாக இருந்தன என்பன போன்ற அனுபவங்களையே வரலாறுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு சகாப்தத்திலும் அதற்கேயுரிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரச்சினைகளும் எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தனவோ அதற்கு ஏற்பத் தீர்வுகளும் வேண்டப்பட்டன. வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவுள்ளதுடன், இந்நிகழ்ச்சிகள் நன்மையானவைகளா? அல்லது தீமையானவைகளா? என்பது கவனத்திலெடுக்கப்படுவதில்லை.” என்கின்றார்.
மெய்யியல் அணுகுமுறை
மெய்யியல் அணுகுமுறை அரசியல் விஞ்ஞானத்திற்கு மிகவும் பழமையானதாகும். இது அரசியல் விஞ்ஞானத்தில் நன்னெறிக் கோட்பாட்டு அணுகுமுறையாகவும் பயன்படுத்தப்பட்டது. மெய்யியலாளர்களின் கருத்துப்படி மனிதர்கள், அரசு, அரசாங்கம் என்பவைகள் எல்லாம் சில இலக்குகள், நன்னெறிகள், உண்மைகள் அல்லது உயர்தத்துவங்கள், யதார்த்தங்களுடன் இணைந்தவைகளாகும். மெய்யியல் என்பது சிந்தனை பற்றிய சிந்தனையாகும். மெய்யியல் ஆய்வு என்பது இலக்கு, இயல்பு பற்றிய வகைப்படுத்தப்பட்ட சிந்தனையாகும். மெய்யியல் ஆய்வின் இலக்கானது “விடயம்” தொடர்பான இலக்கு, கருத்துக்கள், தன்மைகள் போன்றவற்றை சிந்தனை ரீதியாக தெளிவுபடுத்துவதாகும். சிந்தனை வெளிப்பாடு, சிந்தனை வெளிப்படுத்தல் போன்றவற்றின் செல்வாக்கிற்குள் மெய்யியல் ஆய்வாளர்கள் உட்படுகின்றார்கள். இதனால் மெய்யியல் சிந்தனையாளர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசியல் சமுதாயத்திற்கும் சில உயர்ந்த இலட்சியங்களை வழங்கியுள்ளார்கள். மெய்யியல் அணுகுமுறைப் பகுப்பாய்வுகள் விதிவருமுறை அல்லது உய்த்தறிமுறை, தொகுத்தறிமுறை அல்லது விதிவிலக்கு முறைகளுடன் தொடர்புபட்டதாகும். உய்த்தறிமுறைகள் அவதானம் அல்லது ஒப்பீடு, பரிசோதனை அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சியின் வரலாற்றுப் பண்புகள் போன்ற சில விடயங்களுடாக அரசியல் நிகழ்ச்சி தொடர்பான முடிவுகளுக்கு வருவதற்கு உதவுகின்றன. மறுபக்கத்தில் மெய்யியல் அணுகுமுறை தொகுத்தறிமுறை அல்லது விதிவிலக்கு முறையுடனும் தொடர்புபட்டதாகும். விதிவிலக்கு முறையானது, உண்மை என ஊகிக்கப்பட்ட அல்லது உணரப்பட்ட ஆய்வுப் பொருள் அல்லது பல பொதுவான கொள்கைகளிலிருந்து புதிய முடிவினை விருத்தி செய்வதனைக் குறிக்கின்றது. பிளேட்டோ, தோமஸ் மோர், ஹரிங்டன், ரூசோ, கான்ட், ஹெகல், பிறட்லி, சிஜ்விக் போன்ற சிந்தனையாளர்கள் தொகுத்தறிமுறையினைப் பயன்படுத்தி அரசியல் விஞ்ஞானத்தினை ஆராய்ந்துள்ளனர். அரசியல் விஞ்ஞானத்தில் மனித இயல்பு பற்றிய மூல எண்ணங்களிலிருந்தும் அரசின் இயல்பு, இலக்கு, பகுதிகள், எதிர்காலம் பற்றிய எண்ணங்களிலிருந்தும் தொகுத்தறிமுறையிலான புலனாய்வு ஆரம்பமாகின்றது. அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானிகளுக்கும், அரசியல் மெய்யியலாளர்களுக்குமிடையிலுள்ள வேறுபாடுகள் கண்டுணரப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞான மாணவர்கள் எல்லோரும் இன்று அறிவின் உண்மைத் தன்மைகளைத் தேடும் விசாரணைகளை மேற்கொள்வதில்லை. சிலர் நன்னெறி அறிவுக்கான ஆராய்ச்சிகளைச் செய்கின்றனர். இதேபோன்று அரசியல் மெய்யியலாளர்களும் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், அரசாங்கம் எவ்வாறு நடந்து கொள்கின்றது, மக்களும், அரசாங்கமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பவைகள் தொடர்பாக அக்கறைப்படுவதில்லை. அரசியல் விஞ்ஞானிகள் அரசியல் யதார்த்தத்தைக் கற்பதுடன், வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சிகள், அரசியல் நிறுவனங்களின் தொழிற்பாடுகளுக்கு விளக்கமளிக்க முயற்சிக்கின்றார்கள். அரசியல் மெய்யியலாளர்கள் எண்ணங்களைக் கற்பதுடன் அதனை வெளிப்படுத்திக்காட்ட முயற்சிப்பதுடன் அதற்குரிய அங்கீகாரத்தினையும் தேடுகின்றனர்.
நிறுவன அணுகுமுறை
அரசியல் விஞ்ஞான மாணவர்கள் அரசியல் ஒழுங்கமைப்பில் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் கற்பதற்கு வழிப்படுத்தப்படுகின்றார்கள். சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவைகளே இந்நிறுவனங்களாகும். இவ் அணுகுமுறையினை அதிகமான அரசியல் விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளார்கள். புராதன காலத்தில் அரிஸ்டோட்டில், பொலிபியஸ் போன்றவர்களும், நவீன காலத்தில் பிரைஸ், ப்பைனர் போன்றவர்களும் இவ் அணுகுமுறையினைப் பயன்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் நவீன எழுத்தாளர்கள் மேற்கூறப்பட்ட மூன்று நிறுவனங்களுடன் நான்காவதாக அரசியல் கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறுகின்ற அதேநேரம், சமகால எழுத்தாளர்களாகிய பென்லி ரூமன், லேதம், வீ.ஓ.கீ போன்றவர்கள் மேலும் ஒருபடி மேலே சென்று அரசியல் நிறுவனங்களுக்குள் அமுக்கக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனக்கூறுகின்றார்கள். இவர்கள் நிறுவன அணுகுமுறையினை அமைப்பு அணுகுமுறை என அழைக்கலாம் எனவும் வாதிடுகின்றனர். நிறுவன ரீதியான அணுகுமுறையினைப் பயன்படுத்தி எவ்.ஏ.ஒஎக், ஹெமன், ப்பைனர், எச்.ஜே.லஸ்கி, சி.எவ்.ஸ்ரோங் போன்ற ஆங்கில, அமெரிக்க ஆய்வாளர்கள் ஆய்வு நடாத்தியுள்ளார்கள். அரசியல் முறைமையில் உள்ள முறைசார்ந்த, முறைசாராத நிறுவனங்கள் பற்றிய கல்வியாக அரசியல் விஞ்ஞானம் உள்ளதாக இவர்களுடைய ஆய்வுகள் கூறுகின்றன.
சட்ட அணுகுமுறை
மரபுரீதியான அணுகுமுறைகளில் இறுதியாகச் சட்ட அணுகுமுறையினைக் கவனத்தில் கொள்ளமுடியும். அரசியல் என்பது சட்ட நடைமுறை, சட்ட நிறுவனங்கள் என்பவற்றினால் கலந்ததொன்றாகும் என சட்ட அணுகுமுறையாளர்கள் கூறுகின்றார்கள். அரசியல் விஞ்ஞானிகள் சட்டம், நீதி என்பவைகளை சட்ட இயலாக நோக்குவதில்லை பதிலாக, அரசைப் பராமரிப்பதற்கான சட்டம், ஒழுங்கு என்பவற்றின் அடிப்படையிலேயே நோக்குகின்றனர். மேலும் இவர்கள் நீதி நிறுவனங்களின் அதிகார எல்லை, அவற்றின் சுதந்திரம் என்பவற்றிலும் இவர்கள் கவனம் செலுத்துகின்றார்கள். புராதன காலத்தில் சட்ட ஆய்வாளராகிய சிசிரோவிலிருந்து நவீன காலத்தின் சட்ட ஆய்வாளராகிய டைசி வரை சட்டத்தினை அரசுடன் இவ்வாறே தொடர்புபடுத்தியுள்ளனர். இவர்களை விட ஜீன்போடின், கியுகோ குரோசியஸ், தோமஸ் ஹொப்ஸ் போன்ற சி;ந்தனையாளர்களும் சட்ட அணுகுமுறைக்கூடாக அரசியல் விஞ்ஞானத்திற்கு விளக்கமளித்துள்ளனர். ஹொப்ஸின் நோக்கில் “அரசின் தலைமையானது உயர் சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதன் கட்டளை சட்டமாகின்றது. அதற்கு கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படியாதோர் தண்டிக்கப்படல் வேண்டும்” பென்தம், யோன் ஒஸ்ரின், சேர் ஹென்றி மெயின், எ.வி.டைசி போன்றவர்களும் இந்நோக்கிலேயே கருத்துக் கூறியுள்ளனர். அரசியல் பற்றிய கல்வியானது “சட்ட நடைமுறைகளுடன் இரண்டறக் கலந்ததொன்றாகும்” என்பதே இவர்களது முடிவாகும்.
நவீன அணுகு முறை மரபுசார் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டதாகும். மரபுசார்அணுகுமுறையில் பெருமளவிற்கு விபரணமே காணப்படுகின்றது. இதற்கு சட்டம் ஓழுங்கு, நீதி, சமயம், வரலாறு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நவீன அணுகுமுறைக்குத் தரவுகள் அவசியமாகும். இத்தரவுகளைப் பயன்படுத்தி புலனாய்வு செய்யப்படவேண்டும். இப்புலனாய்வு அனுபவப் புலனாய்வாக இருத்தல் அவசியமாகும். அப்போதுதான் ஆய்வினூடான உண்மை கண்டறியப்படும். இதில் பலவகையான அணுகுமுறைகள் காணப்படுகின்றன.
புள்ளிவிபர அணுகுமுறை:-
புள்ளிவிபர ரீதியாக அரசியல் விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விஞ்ஞானரீதியாக அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைப்பதே இவ் அணுகுமுறையி;ன் நோக்கமாகும். அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் புள்ளிவிபர ரீதியாக கணிப்பிடப்படுகின்றன. அதன் அடிப்படையில் அந்நிகழ்ச்சி தொடர்பான எதிர்வு கூறல்களும், முடிவுகளும் முன்வைக்கப்படுகின்றன. இவ் அணுகுமுறையினை தேர்தல் நடத்தை, அரசியல் கட்சிகள், பொதுசன அபிப்பிராயம் போன்ற ஆய்வுகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள். கலுப், சாள்ஸ்மெரியம், ஹெரோல்ட் கொஸ்நெல் போன்ற அமெரிக்க அறிஞர்கள் மக்களின் தேர்தல் நடத்தைகளை கணிப்பதற்கு பெருமளவிற்கு இவ் அணுகுமுறையினைப் பயன்படுத்தியிருந்தனர். புள்ளிவிபர அணுகுமுறை ஒப்பீட்டு அரசாங்கம், சர்வதேச உறவுகள் தொடர்பாகக் கற்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. டேவிட் தோம்சன் “சர்வதேச உறவில் புள்ளிவிபரவியல் மற்றும் சமூகவியல் நுட்பங்களைப் பிரயோகிக்கும் வரை இக் கற்கையின் விஞ்ஞானப் பண்பு மேலும் முன்னேற்றமடையும்” எனக் கூறுகின்றார்.
அவதான அணுகுமுறை:-
அவதான ஆய்வு முறை அனுபவத்தால் அறியப்பெறுகிற ஒரு கல்வி முறையாகும். ஜேம்ஸ் பிரைஸ் இவ் அணுகுமுறையின் ஆதரவாளராகும். குறிப்பிட்ட இடத்திலுள்ள பிரச்சினைகள், நிறுவனங்களின் செயற்பாடுகளை புலன் விசாரணை செய்து கற்பதற்கும், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும் இவர் அதிக முக்கியத்துவம் வழங்கியிருந்தார். இவர் ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, அவுஸ்ரேலியா, நிய10சிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று இந்நாடுகளையும், மக்;களையும் கற்றதுடன், இந்நாடுகளில் செயற்படும் நிறுவனங்களை மிகவும் நெருக்கமாக இருந்து அவதானித்து தனது சொந்த முடிவுகளை உருவாக்கியிருந்தார்.
“தரவுகளிலிருந்து உண்மையானதும் சரியானதுமான அறிவினைப் பெறுவதற்கு நடைமுறை அரசியலையும் ஒருங்கிணைக்க வேண்டும். பிரான்ஸ் அல்லது ஐக்கிய அமெரிக்கா நாட்டிலுள்ள திறன்வாய்ந்த மனிதனொருவன் புத்தகங்க@டாக பெறுகின்ற அறிவை விட பன்னிரெண்டு வருடங்களில் பிரபல்யமான அரசாங்கங்களின் யதார்த்தத்தினை அனுபவத்தாலும் திறமையினாலும் பெற்று விடுகின்றான்.” எனக் கூறுகின்றார்.
அரசியல் ஆய்வாளராகிய ஜேம்ஸ் பிரைஸ் ஒரு தனி அரசினை மட்டும் அவதானித்து இம்முடிவினை உறுதிப்படுத்தவில்லை. அவருடைய கள புலனாய்வுகள் எல்லா நாடுகளினதும் மக்களின் அரசியல் பழக்கங்கள், இயல்பான மனப்பாங்குகள் தவிர்ந்த அரசியல் நிகழ்ச்சிகள், ஒவ்வொரு இடத்திலுமுள்ள மனிதனின் அடிப்படை இயல்புகள் உள்ளடங்கிய பரந்த ஆய்வாக இருந்தது. இவரின் கருத்துப்படி தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் அவைகள் உண்மையான தரவுகளா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே அரசியல் நிகழ்ச்சி தொடர்பான கற்கைக்கு நேரடி அவதானம் முக்கியமானதாகும். செயிற் என்பவர், “அரசியலில் விஞ்ஞானத் தன்மையினை அவதானத்தினூடாகவே அபிவிருத்தி செய்ய முடியும். அவதானம் பெருமுயற்சியுள்ளதும், பரிசோதனையை விட திறந்த தன்மையுடையதுமாகும்” எனக் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒப்பீட்டு அணுகுமுறை
ஒப்பீட்டு அணுகுமுறை அரிஸ்டோட்டில் காலத்திலிருந்து அரசியல் விஞ்ஞானத்தில் ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரிஸ்டோட்டில் 158 அரசியல் யாப்புக்களை கற்று பின்னர் அவைகளை ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்து சில விளக்கங்களையும், முடிவுகளையும் கொடுத்திருந்தார். நவீன காலத்தில் ஒப்பீட்டு அணுகுமுறையானது மொண்டஸ்கியூ, டி ரக்கிய10வில், பிரைஸ் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் ஒப்பீடு என்பது மிகவும் காத்திரமான கலந்துரையாடலாகிவிட்டது. 1944ஆம் ஆண்டு ‘ஒப்பீட்டு அரசாங்கம் பற்றிய கற்கைக்கான அறிக்கை’ ஆய்வுக் குழுவினால் பிரசுரிக்கப்பட்டது. யுனெஸ்கோ சமகால அரசியல் விஞ்ஞானம் என்னும் கையேட்டினை பிரசுரித்திருந்தது. 1952 ஆம் ஆண்டு சர்வதேச அரசியல் விஞ்ஞானக் கழகத்தினால் அரசியல் விஞ்ஞானத்திற்கான கற்பித்தல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. ஓப்பீட்டினூடாகப் பொதுமுடிவுக்கு வருவதை இவ்வணுகுமுறை குறித்து நிற்கின்றது. வேறுபட்ட அரசியல் எண்ணங்கள், அரசியல் நிறுவனங்கள், அரசியல் முறைமைகள் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்ததன் பின்னர் சில முடிவுகளுக்கு அரசியல் விஞ்ஞானிகள் வருகின்றனர். இவ்வாறு ஒப்பீடு செய்யப்படும்போது இவைகளுக்கிடையிலான ஒத்ததன்மைகள், வேற்றுமைகள் குறிப்பிட்ட சூழலில், நிபந்தனைகளில் எவ்வாறிருந்தன என்பது கண்டுணரப்படுகின்றன. ப்பைனர், சி.எவ்.ஸ்ரோங், கே.சி.வேயர் போன்றவர்கள் வேறுபட்ட அரசியல் நிறுவனங்களை கற்பதற்கு ஒப்பீட்டு முறையானது விஞ்ஞானப10ர்வமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாவிட்டாலும், ஒப்பீடு செய்யும் போது சில சந்தர்ப்பங்களில் தவறுகள் நிகழ்ந்து விடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ஒப்பீடு செய்யும் போது வலுவான முடிவுகளுக்கு வருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறுகின்றார்கள்.
நடத்தைவாத அணுகுமுறை:-
அரசியல் விஞ்ஞானத்தில் நடத்தைவாதம் மிகவும் முக்கியமான அணுகுமுறையாகக் கருதப்படுகின்றது. ஆரம்பகாலத்திலிருந்தது போல அரசியல் நிறுவனங்களையோ, அவற்றின் வரலாற்று அபிவிருத்திகளையோ ஆய்வு செய்யாமல், அரசியலில் பங்கு கொள்ளுகின்ற மனித நடத்தைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதியில் வலுப்பெறலாயிற்று. 1908ஆம் ஆண்டு கிரஹம்வொலாஸினால் வெளியிடப்பட்ட “அரசியலில் மனித இயற்கையாற்றல்” என்ற நூலிலும், அமெரிக்க அறிஞரான ஆதர்.எப்.பென்லியினுடைய “அரசாங்கத்தின் செயற்பாங்கு” எனும் நூலிலும், மனித நடத்தை பற்றிய ஆய்வு அரசியல் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், லாஸ்வெல் என்பவரும் இவ் அணுகுமுறை வளர்வதற்குப் பங்களிப்புச் செய்திருந்தார். நடத்தைவாத அணுகுமுறை மரபுரீதியானதும், நிறுவனரீதியானதுமான அணுகுமுறைகளை நிராகரிக்கின்றது. ஐக்கிய அமெரிக்க அரசியல் விஞ்ஞானச் சங்கத்தின் பிரதம நிர்வாகி ‘கிர்க் பற்றிக்’ நடத்தைவாதம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“இரண்டாம் உலக யுத்தத்திற்கும், 1950களின் நடுப்பகுதிக்குமிடையில் நடத்தைவாதம் ஆராய்ச்சிகளையும், சவால்களையும் எதிர்நோக்கியது. இதனால் நடத்தைவாதம் தொடர்பான விவாதங்கள், இயக்கங்கள், தீர்மானங்கள் என்பன இக்காலத்தில் முக்கியம் பெறலாயிற்று.” எனக் கூறுகின்றார்.
நடத்தைவாத அணுகுமுறையின் முக்கிய இயல்புகளைப் பின்வருமாறு வரையறுக்கலாம். சித்தாந்தங்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், நிகழ்வுகள், என்பவைகளைக் கற்பதை விட சமூகக்குழுக்கள், தனிநபர்களின் நடத்தைகளைக் கோட்பாட்டுரீதியாகவும், அனுபவ ஆய்வாகவும் கற்பது இதன் நோக்கமாகும். இது சமூக உளவியல், சமூகவியல், கலாசார மானிடவியல் போன்றவற்றினூடாகக் கோட்பாடுகளையும், ஆராட்சிகளையும் மேற்கொள்ள முயலுகின்றது. கோட்பாட்டிற்கும் ஆராய்ச்சிக்குமிடையிலான பரஸ்பர உறவினை இது முக்கியத்துவப்படுத்துகின்றது.
முறைமைப்பகுப்பாய்வுமுறை:-
பொது முறைமைப் பகுப்பாய்வு இயற்கை விஞ்ஞானத்தில் இருந்து பெறப்பட்டதொரு அணுகுமுறையாகும். குறிப்பாக உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்டதாகும். உயிரியல் விஞ்ஞானியாகிய லுட்விங் வொன் பர்ரலன்பி (Ludwing Von Bertallanfy) என்பவர் 1920 களில் பொது முறைமைப் பகுப்பாய்வு தொடர்பாக எழுதியிருந்தார். ஆயினும் இவரின் அணுகுமுறையானது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே இப் பகுப்பாய்வு முதன்மைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர். விஞ்ஞானிகளின் ஐக்கியத்திற்கான தேவையினை பல்வேறு துறை சார்ந்த கல்வியியலாளர்கள் எடுத்துக் கூறியிருந்தனர். அத்துடன் கல்வித் துறைகள் மிகவும் இறுக்கமாகவும், தனித்தும் இயங்குவதை இவர்கள் கண்டனம் செய்திருந்தார்கள். இதனால் பொது முறைமைப் பகுப்பாய்வு பிரபல்யமடையத் தொடங்கியதுடன், எல்லோரது கவனத்தையும் ஈர்த்து அதன் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான அடிப்படையினை உருவாக்கியது. அத்துடன் 1956 ஆம் ஆண்டு பொது முறைமைப் பகுப்பாய்வு தொடர்பான வருடாந்த நூலும் வெளியிடப்பட்டது.
சமூக விஞ்ஞானத்தில்; பொது முறைமைப் பகுப்பாய்வினை ஐக்கிய அமெரிக்க கல்வியியலாளர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். சமூக விஞ்ஞானத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையினை விமர்சனம் செய்யும் இக்கல்வியியலாளர்கள் இக் கற்கை நெறிக்குள் உள்ள நெருக்கமான தன்மையினை எடுத்துக்காட்டினர். ஆயினும், சமூக விஞ்ஞானத்திற்கு பொது முறைமைப் பகுப்பாய்வானது மானிடவியல் ஊடாகவே கொண்டுவரப்பட்டது. மானிடவியலிலிருந்து சமூகவியல், உளவியல், அரசியல் விஞஞானக்; கற்கை நெறிகளுக்கு பொது முறைமைப் பகுப்பாய்வு கொண்டு வரப்பட்டது. இன்னோர் வகையில் கூறின் எமில் டுர்கைம் (Emile Durkheim), ஏ.ஆர். ரெட்கிளிப் பிறவுண் (A.R Radcliffe Brown) போன்ற மானிடவியலாளர்களின் பங்களிப்பினால் சமூக விஞ்ஞானத்திற்குள் பொது முறைமைப் பகுப்பாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் 1953 ஆம் ஆண்டு எமில் டுர்கைம் இப் பகுப்பாய்வு முறையினை சமூகவியல், மெய்யியல் கற்கை நெறிக்குள் அறிமுகப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டில் பிறவுண் புராதன சமுதாயத்தின் அமைப்பு, தொழிற்பாட்டு முறையினை இப்பகுப்பாய்வு முறைக்கூடாக விளக்கினார். 1960களின் மத்திய காலப்பகுதியில் அரசறிவியலாளர்களாகிய டேவிட் ஈஸ்ரன் (David Easton),கப்ரியல் ஆமன்ட் (Gabriel Almond), மோர்டன் கப்லான் (Morton Kaplan) போன்றவர்கள் இப்பதத்தினைப் பயன்படுத்தவும், இதனூடாகச் சிந்திக்கவும் தொடங்கினார்கள். இவ் அரசியல்விஞ்ஞானிகள்; அமைப்பு-தொழிற்பாடு, உள்ளீடு-வெளியீடு (input-out put)போன்றவற்றை பொது முறைமைப் பகுப்பாய்வு ஊடாகவே விளக்க முற்பட்டனர்.
பொது முறைமை என்ற சொற்பதத்திலுள்ள முறைமை என்ற பதத்திற்கு பல்வேறுபட்ட எழுத்தாளர்களும் தாம் சார்ந்த துறைகளுக்கு ஏற்ப விளக்கமளித்துள்ளனர். இதனால் முறைமை என்ற சொற்பதத்திற்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் ஒன்றை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. லுட்விக் வொன் பர்ரலன்பி என்ற உயிரியல் விஞ்ஞானியின் கருத்துப்படி முறைமை (System) என்பது “மூலக்கூற்றுத் தொகுதிகளிற்கிடையிலான (Set of Elements) உட் தொடர்பாகும்” என்கிறார். ஏ.ஹொல், (A.Hall), ஆர்.வ்பேகன் (R.Fagan) ஆகியோர்களுடைய கருத்துப்படி முறைமை என்பது “நோக்கங்களின் தொகுதிகளும் (Set of Objects)அவற்றிற்கிடையிலான உறவுமாகும்” என்கிறார். வர்மா (Varma) என்பவரின் கருத்துப்படி முறைமை என்பது “நோக்கங்களின் தொகுதிகளிலுள்ள அமைப்பு ரீதியான இயல்புகளுக்கிடையிலுள்ள உறவு ஆகும்” என்கிறார். இங்கு எல்லா வரைவிலக்கணங்களும் ஒன்றிலிருநது ஒன்று வேறுபடுவதை அவதானிக்க முடியும். பொது முறைமைப் பகுப்பாய்விற்கும் முறைமைப் பகுப்பாய்விற்கும் இடையில் அடிப்படை வேறுபாடுள்ளது. சில நேரங்களில் இரண்டு பதங்களையும் ஒன்றிற்காக மற்றொன்று பயன்படுத்தப்பட்டு விடுகின்றது. ஆகவே இரண்டு பதங்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். பொது முறைமைப் பகுப்பாய்வு எல்லா முறைமைக்கும் பொதுவாக பிரயோகிக்க கூடியதாகும். மறுபக்கத்தில் பகுப்பாய்வானது அரசியல் முறைமைக்;கு மாத்திரமே பிரயோகிக்கக் கூடியதாகும். ஆகவே முறைமைப் பகுப்பாய்வு என்பது அரசியல் முறைமைக்குச் சமனானதாகும்.
முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறையின் வளர்ச்சிக்கு டேவிட் ஈஸ்ரன், கப்ரியல் ஆமன்ட் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர். அதேநேரம் டல்கட் பாசன் என்பவரது சிந்தனைகளும் கூடியளவிற்கு இவ் அணுகுமுறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளன. முறைமை பகுப்பாய்வு உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து வந்தமையால் அரசியல் விஞ்ஞானத்தினை மேலும் விஞ்ஞானப் பண்பு கொண்ட கற்கைநெறியாக மாற்றியுள்ளது. முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை அரசியல் விஞ்ஞானத்தில் மனித நடத்தை பற்றி ஆய்வு செய்வதற்கும் பெரிதும் உதவுகின்றது. 1957 ஆம் ஆண்;டு ஈஸ்ரன் வெளியிட்ட “அரசியல் முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை” என்ற கட்டுரையில் இது தொடர்பாக விவாதிக்கின்றார். 1965 ஆம் ஆண்டு இவர் ‘அரசியல் முறைமைப் பகுப்பாய்வு’ என்னும் நூலை எழுதியிருந்தார். சமூகம்; ஒரு முறைமை என இவர் கூறுகின்றார். சமூக இயக்கத்தைச் சில விதிகள், நெறிகள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சமூகம் ஓர் முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் எனவும் அச் சமூகம் தனக்கென வகுத்துக் கொடுக்கப்பட்ட முறைக்கேற்பவே இயங்குகின்றது எனவும் கூறப்படுகின்றது. இச் சமூக முறைமையானது வௌ;வேறு இயல்பு, தன்மை, கொண்டு இயங்குகின்றது. ஈஸ்ரன் தனது நூலில் முறைமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள தொடர்பினை முதன்மைப்படுத்துகின்றார். மேலும் இவர் அரசியலுக்கும் ஏனைய சமூக வாழ்க்கைக்கும் இடையிலான உறவினைத் தெளிவுபடுத்துவதிலும் முறைமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் தன்மையினைத் தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றார். இவரின் கருத்துப்படி ஒவ்வொரு சமூக அமைப்பிலும் வேறுபட்ட பகுதிகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட இயல்புகளும், செயற்பாடுகளும் கொண்டவைகளாகும். இவை யாவும் ஒருங்கிணைந்து செயற்படுவதும், அமைப்புரீதியாக இவை ஒவ்வொன்றும் தமக்கிடையே உறவுகளை வளர்ப்பதும் அவசியம் என்கின்றார். ஒவ்வொரு கற்கை நெறியும் பொது முறைமைக்குள் இருக்கின்ற உப முறைமை போன்றே இயங்குகின்றன. எல்லா இயற்கை விஞ்ஞானங்களும் பௌதீகவியல், இரசாயனவியல், போன்ற உப முறைமைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு உப முறைமையும் ஒவ்வொரு தனி ஒழுங்குமுறையாகும். இவை தமக்கென்று தனித்துவத்தையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறே அரசியல் விஞ்ஞானம், பொருளியல், உளவியல் போன்ற எல்லா உப முறைமைகளும் சமூக ஒழுங்குமுறையினுள் உள்ளடக்கப்படுகின்றன. எனவே இப்புதிய உப முறைமைகளைக் குறிப்பதற்கு புதிய பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அரசியல் முறைமை, பொருளாதார முறைமை, உளவியல் முறைமை என்பவற்றைக் கூறிக்கொள்ளலாம்.
சமூகவியல் அணுகுமுறை
சமூகவியல் அடிப்படையில் ஒப்பீட்டரசியலை விளங்கிக் கொள்ளல் என்பதுதான் இவ்வணுகுமுறையினுடைய பிரதான நோக்கமாகும். மக்ஐவர் (Mac Iver), டேவிட் ஈஸ்ரன் (David Easton), ஐி. ஏ ஆமன்ட் (G.A.Almond) போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் இவ் அணுகுமுறையினை தமது அரசியல் நடத்தை பற்றிய ஆய்விற்காக பயன்படுத்தியுள்ளார்கள். இவர்களை விட வெபர் (Weber), கொம்ரே(Comte), ஸ்பென்ஸ்ஸர் (Spencer) போன்ற சமூகவியலாளர்கள் கருத்தில் “அரசு” என்ற நிறுவனம் ஒரு அரசியல் நிறுவனம் என்பதை விட இதுவொரு சமூக நிறுவனம் என்பதுதான் பொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்திருந்தனர். இவர்களது கருத்தில் தனிப்பட்டவர்களின் அரசியல் நடத்தைகளை விளங்கிக் கொள்வதற்கு அல்லது விளங்க வைப்பதற்கு சமூகம் பற்றிய தெளிவு அவசியம் எனக் கூறுகின்றனர். சூழலின் தாக்கம் என்பது வௌ;வேறுபட்ட நடத்தையைக் காட்டுகின்றது. ஆகவே ஒரு அரசியல் நடத்தையை விளங்கிக் கொள்வதற்கு இத்தனிப்பட்டவர்கள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
சமூக அமைப்பைப் பொறுத்தவரையில் தனிப்பட்டவர்கள் தமது நடத்தைகளை வெளிப்படுத்துவதுடன், குழுக்களாகவும் இணைந்தே தமது நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். எனவே இங்கு சமூகமைப்பில் ஏதோவோர் வகையில் தன்னை வெளிப்படுத்தும் தன்மை காணப்படுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் சமூக செயற்பாட்டில் பங்குபற்றுகின்றார்கள். இதன் மூலம் தமக்குரிய அந்தஸ்தையும் தீர்மானிக்கின்றனர்.எனவே சமூக இயங்கு முறையில் பங்கு பற்றுதல் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய சிற்சில தனிப் பண்புகள் எனலாம். இத்தனிப் பண்புகள் ஒரு சந்ததியிடமிருந்து மறு சந்ததிக்கு தொடர்ந்தேச்சியாக கடத்தப்படுகின்றன. இத்தகைய பண்புகள் நீடித்துக் கொண்டு செல்வதனால் இதனையே சமூகமயமாக்கம் (Socialization) என அழைக்கின்றனர்.
மேலும் சமூகவியல் அணுகுமுறையில் காணப்படும் மற்றமொரு பண்பு அரசியல் கலாசாரம் என்பதாகும். அதாவது அரசியல் கலாசாரத்தினூடாக அரசை அணுகும் பண்பு காணப்படுகின்றது. அரசியல் கலாசாரம் என்பது அரச சமுதாயத்தில் தனிநபர்களினால் என்ன படிப்பினைகள் பெறப்பட்டது என்பதும், அரசியல் சமூகத்தின் வாழ்க்கை முறை என்ன, சிந்தனை முறை என்ன, செயற்பாடுகள், உணர்வுகள் எத்தகையது போன்ற விடயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதே அரசியற் கலாசாரமாகும். எனவே இதனூடாக சமூகவியல் அணுகுமுறைமையில் அரசை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
உளவியல் அணுகுமுறை
அரசறிவியலில் உளவியல் என்பது மிகவும் நெருக்கமானதாக காணப்படுகின்றது. மெரியம் (Marriam), லாஸ்வெல் (Lass Well), கிரஹாம் வொலாஸ் (Graham Wallas), ஆர். ஏ. டால் (R.A.Dhal) போன்ற சமூகவியலாளர்கள் அரசை விளங்கி;க்கொள்ள உளவியலைப் பயன்படுத்தும் சிந்தனையாளர்களாக காணப்படுகின்றனர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாக்கியவல்லி, பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொப்ஸ் போன்றோர் தாம் வாழ்ந்த காலச் சூழிநிலையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள், மனித, சமூக, சொத்து போன்றவற்றிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமாயின், “பலம்” என்பது அவசியமாக இருக்க வேண்டும் என்கின்றனர். இங்கு “பலம்” என்பது உளம் சார்ந்த எண்ணக்கருவாகும். உளவியல் ரீதியான பலத்துடன் இருப்பவனே ஆளத்தகுதியானவன் எனக் கூறப்படுகின்றது. “இளவரசன் நரி போன்ற தந்திரமுடையவனாகவும், சிங்கத்தைப் போன்ற பலமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்” என்ற மாக்கியவல்லியின் கருத்தைக் குறிப்பிடலாம். இவ் எண்ணக்கரு வளர்ச்சியடைந்து, அரசை விளங்கிக் கொள்ள உளவியல் அடிப்படையானது என்ற கருத்து சமூகவிஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமூகத்தில் தனிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள் மன எழுச்சிகள் இருக்கின்றன. இவை யாவும் உளம் சார்ந்தவையாகும். எனவே இங்கு அரசு சார்ந்த விடயங்களில் இச்சமூகம் ஈடுபடுகின்றது. இவ்வாறு இயங்கும் போது மன உணர்ச்சிகள், எழுச்சிகள் யாவும் வெளிப்படுத்தப்படும் இவையே அரசியற் செயற்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது.
தனிமனிதனுக்குரிய “ஆளுமை” என்பது சமூகத்தில் பிரதிபலித்து பின் அது அரசிலும் பிரதிபலிக்கின்றது. இங்கு அதிகாரம் என்பதும் ஒரு உளவியல் விடயமாகும். அதிகாரம் என்பது ஒரு சமூக மனப்பாங்காகும். இங்கு அதிகாரத்தை அனுபவித்தல் அல்லது செயற்படுத்தல் என்பது சமூகம் தொடர்பான விடயமாகவே காணப்படும். “அதிகாரம் பற்றிய எண்ணக் கருவே அரசியல் விஞ்ஞானம்;” என்பதன் படி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கற்கையாகவே இது விளங்குகின்றது. இதனால் அதிகாரத்தின் இயல்பு, வியாபகம், அதன் அடிப்படை போன்ற விடயங்களை ஆய்வு செய்யும் ஒரு கற்கை நெறியாக அரசியல் விஞ்ஞானம் காணப்படுகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானிகள் இக் கற்கைநெறியை “அதிகாரத்திற்கான போராட்டமாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறுகின்றனர். ஏனெனில் தனிநபர்கள் அதிகாரத்தை அனுபவிப்பது அல்லது அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என விரும்புவது போன்ற உளவியல் நிலைகள் அரசியலில் பிரதிபலிக்கின்றன. இதனால் அதிகாரத்திற்கான போராட்டங்களும் நிகழ்கின்றன. இச் செயல் முறை காரணமாக உளவியலானது அரசியலில் பிரதான இடம் வகிக்கின்றது. பிரட்டிறிக் எம் வொற்கின்ஸ் (Fredrick M.Watkins) என்பவர் “அரசியல் விஞ்ஞானம் பற்றிய முறைப்படுத்தப்பட்ட கல்வி என்பது அரசு பற்றியதோ அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் பற்றியதோ அல்ல. பதிலாக அதிகாரம் பற்றியதும், அதன் பிரச்சினைகள் பற்றியதுமான ஓர் புலன்சார் விசாரணையாகும்”. எனக் கூறுகின்றார்.
பொருளியல் அணுகுமுறை
பொருட்களின் உற்பத்தி, விநியோகம், அதன் பங்கீடு என்பன பொருளாதாரத்தில் பிரதானமாக கருத்தில் எடுக்கப்படும் பண்புகளாகும். இப்பண்புகளைத் தீர்மானிக்கும் சக்தி “அரசு” என்ற நிறுவனத்திடமே இருக்கின்றது. நியமங்கள், விதிகள் என்பவற்றையும் அரசே தீர்மானிக்கின்றது. எனவே பொருளாதாரம் என்பது அரசு என்ற ஒன்று இல்லாமல் இயங்க முடியாது அரசியல் நிகழ்வின் போது பொருளாதாரமும் ஒன்றிணைந்தே காணப்படுகின்றது. இதேவேளை பொருளாதாரம் என்பது வரலாற்றில் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இப்பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் போது அதற்கேற்ப அரசுகள் யாவும் தம்மை மாற்றியமைத்திருக்கின்றன. காலனித்துவ உருவாக்கமும் பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. பொருளியல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பது பல சிந்தனையாளர்களையும், தாராண்மைவாதம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற சித்தாந்தங்களையும் தோற்றுவித்தது. இச்சித்தாந்தங்கள் அரசு எவ்வாறு மீள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்ற விதிகளைக் கொண்டிருந்தன.அடம்ஸ்மித் காலத்திலிருந்து இச்சிந்தனைகள் காணப்படுகின்றன. ஜெ.எஸ் மில், கால் மாக்ஸ் , மிற்சேல் போன்றோர் மேற்கொண்ட ஆய்வானது அரசுக்கும், பொருளாதாரத்திற்கும் புதியதொரு விஞ்ஞான விளக்கத்தைத் தருவதாக அமைந்தது. குறிப்பாக முதலாளித்துவ சமூகமைப்பு மீது மாக்ஸ் கொடுக்கும் விமர்சனம் இங்கு குறிப்பிடக் கூடியளவிற்கு செல்வாக்குச் செலுத்தியதுடன், பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டே தனது கோட்பாட்டையும் நிலை நிறுத்தியுள்ளனர்.
மாக்சிச அணுகுமுறை
மாக்சிச அணுகுமுறை தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பெற்றதொன்றாகும். இது நவீன, மரபு சார் அணுகுமுறை ஆகிய இரண்டினதும் பண்பைக் கொண்டிருப்பதுடன் கால் மாக்ஸினால் உருவாக்கப்பட்டதுமாகும். மாக்சிசம் வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயக்கவியல் பொருள் முதல்வாதம் எனும் இரு பெரும் தத்துவங்களினூடாக தனது ஆய்வை மேற்கொண்டுள்ளது. இவ்வணுகுமுறையினூடக அரசியல் விஞ்ஞானத்தினை நோக்கும் போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள, அபிவிருத்தியடைந்த நாடுகள் என்பவற்றுக்கிடையிலான ஏகாதிபத்தியப் பண்பு, ஏகாதிபத்தியச் சுரண்டல், நவகாலனித்துவம் என்பவற்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் மாக்சிச அணுகுமுறை உள்நாட்டு ரீதியாக முதலாளித்துவ சுரண்டல்களை தொழிலாளர்கள் இனங்கண்டு கொள்ளவும், அதன் வழி புரட்சிகள் இடம்பெறவும் துணை புரிகின்றது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் முதலாளித்துவம் நலன் பேணும் முதலாளித்துவமாக இருப்பதும், வர்க்க முரண்பாடுகளும், வர்க்க முறைமைகளும் சமூகத்தில் வலுவிழந்து வருவதுடன், இன முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. மாக்சிச அணுகுமுறையின் இறுதிக்கட்டமாகிய கம்யூனிஸ சமூகம் அடையப்படும் முன் மாக்ஸ் தற்போதுள்ள நலகாலனித்துவ சமூகம் தோன்றும் என்பதை எதிர்வு கூறத் தவறி விட்டார் என்ற வகையில் இவ்வணுகுமுறை விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா?

அரிஸ்ரோற்றல் காலத்திலிருந்து உலகளாவிய ரீதியில் அரசியலை விஞ்ஞானத்தின் எசமான் (Master) என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பொலொக் (Pollock) கொம்ட் (Compte) போர்ட் (Ford) போன்றோர் இவ்வாறு அழைக்கப்படுவதை மறுக்கிறார்கள். அரிஸ்ரோற்றல் இதனை அரசின் அல்லது அதிகாரத்தின் விஞ்ஞானமாக விளக்கமளித்தார். எனவே அரசறிவியல் விஞ்ஞானம் ஒரு கலையா? அல்லது விஞ்ஞானமா? என்ற விவாதம் காலங்காலமாக நிகழ்த்தப்படுகின்றது. அரசியல் விஞ்ஞானம் ஒரு கலை என்றும், விஞ்ஞானம் என்றும் இரு பக்க விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னோர் வகையில் கூறின் பழைய பெயராகிய “அரசியல்” என்பதற்குப் பதிலாக “அரசியல் விஞ்ஞானம்” எனப் பெயரிடும் போது எதிர்வாதங்கள் ஏற்படுகின்றன. மேரி வொல்ஸ் ரோன்கிராப்ற், வில்லியம் க்கோட்வின், விக்கோ, ஹியும், பொலொக், சீலி போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானம் எனப் பெயரிடுவதையே பெரிதும் விரும்பியிருந்தனர். இருபதாம் நூற்றாண்டிலேயே “அரசியல் விஞ்ஞானம்” என்ற புதிய பெயர் பிரபல்யமடைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையிலான ஆய்வாளர்கள் பழைய பெயராகிய “அரசியல்” என்பதற்கு பதிலாக அரசியல் விஞ்ஞானம் எனப் பெயரிட்டு அழைப்பதையே விரும்பினர். இவ்வாறு அழைப்பது ஏற்புடையதாக இருப்பினும், இக்கற்கை நெறியினை சில ஆய்வாளர்கள் “அரசியல்”, “அரசியல் விஞ்ஞானம்” ஆகிய இரண்டு பெயர்களையும் முற்றிலும் ஒரே கருத்தில் பயன்படுத்தியுள்ளனர். நடத்தைவாதிகள் இக்கற்கை நெறியை மீண்டும் பழைய பெயராகிய “அரசியல்” என்ற பதத்தினால் அழைக்க விரும்பினர். ஆயினும், சில ஐக்கிய அமெரிக்க எழுத்தாளர்கள் அரசு, அரசாங்கம் என்பதற்குப் பதிலாக அரசியல் முறைமை (Political System) என்ற புதிய பெயரால் அழைக்க விரும்பினர்.

அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அல்லது இல்லையா என்பது தொடர்பாக எம்மிடம் எதிர்மாறான கருத்துக்கள் உள்ளன. எனவே நியாயமான முடிவு ஒன்றிற்கு நாம் வர வேண்டும். சமகாலம் தொழில்நுட்பவியல் காலமாகும். மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும் விஞ்;ஞான அறிவு உதவுகின்றது. அது மனிதனை மதிப்போடும், பகுத்தறிவோடும் ஒழுக்கமாக வாழ்வதற்கும் உதவியுள்ளது. விஞ்ஞான வழிமுறை என்பது நவீனகாலப்பகுதியின் ஒரு கண்டு பிடிப்பாகும். பக்கச்சார்பற்ற, நன்றாக நிலை நிறுத்தப்பட்ட, முறைப்படியமைந்த அறிவைப் பெறுவதை விஞ்ஞானங்கள் குறிக்கோளாகக் கொள்ளு¬கின்றன. இவற்றினை அடைவதற்குச் சில விசாரணை முறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவையே விஞ்ஞான வழிமுறைகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது விஞ்ஞானங்களால் கட்டியெழுப்-பப்பட்ட மாதிரியான விசாரணை விஞ்ஞானவழி முறை என அழைக்கப்படுவதற்கு உரித்துடையதாகியது. இவ்வழிமுறை இரண்டு தெளிவான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  1. தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பவியல் வழிமுறையூடாக ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் விசாரணை செய்வதும், அளவிடுவதுமே விஞ்ஞான வழிமுறை என அழைக்கப்படுகின்றது. இத்தொழில்நுட்ப வழிமுறைகள் வேறுபடும் போது விஞ்ஞானங்களும் வேறுபடுகின்றது.
  2. பெற்றுக் கொண்ட தரவுகளின் இயல்புகளுக்கு ஏற்ப அளவையியல் முறைமைகளின்படி காரண காரியங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த அளவையியல் வழிமுறைகள் தொழில்நுட்பவியல் வழிமுறைகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகும்.
எனவே நாம் முதலில் விஞ்ஞானம் என்ற சொல்லிற்குரிய அர்த்தத்தினைச் சரியாக விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். விஞ்ஞானம் என்பது “பொதுவான விதிக@டான செயற்பாட்டினைக் காட்சிப்படுத்துகின்றதும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டதுமான உண்மைகளுடன் தொடர்புடைய கல்வி அல்லது அறிவின் ஒரு கிளை” என அமெரிக்க அகராதி கூறுகின்றது. இவ்வகையில் விஞ்ஞானத்தின் பிரதான இயல்புகளாக பின்வருவனவற்றைக் கூறிக் கொள்ளலாம்.
  1. நிகழ்வதற்குரிய சாத்தியக் கூறினை கருத்துடன் சுருக்கமாக, உறுதியாக ஒருங்கிணைத்து முறைப்படுத்தல்.
  2. தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விதிவரு முறையினால் பொதுக்கருத்தினை உருவாக்கும், எதிர்வு கூறும் திறன்.
  3. தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விதிவரு முறையினால் பொதுக்கருத்தினை உருவாக்கும் தரவுகளை ஒப்பாய்வு செய்யக்கூடிய நிலை.
  4. முறை அல்லது முறைமையியலின் உடன்பாடு.
  5. விஞ்ஞான ரீதியாக வேலையுடன் ஈடுபாடு காட்டக்கூடிய போதிய பயிற்சி என்பவைகளாகும்.
இலகுவாக கூறின் “விஞ்ஞானம் அறிவின் ஒரு கிளை” இது உள் நோக்கங்கள் எதுவுமில்லாத முறைப்படுத்தப்பட்ட அல்லது அறிவுகளுக்காகத் தேடிப்பெற்ற அறிவு எனக்கூறலாம். நுணுக்கமான விபரங்கள் எவ்வித பாரபட்சமுமின்றியும், தப்பெண்ணங்களின்றியும் சேகரிக்கப்படல், தப்பெண்ணங்கள் எதுவுமின்றி இவைகள் அதன் இயல்புகள் அல்லது ஒத்த தன்மைகள், வேறுபாடுகளுக்கேற்ப வகைப்படுத்தப்படல், தகவல்களின் நடத்தையினை அடிப்படையாகக் கொண்டு பொதுக் கருத்தினை உருவாக்குதல் இறுதியாக இவைகள் தொடர்பான விதிகள் உருவாக்கப்படல் என்பவைகளைக் கொண்டதே விஞ்ஞானமாகும். ஜி.என்.சிங் (G.N.Sing) என்பவர் விஞ்ஞானத்தினை நான்காக வகைப்படுத்தலாம் எனக்கூறுகின்றார்.
  1. கருத்தியலான அல்லது மனத்தால் இயக்கப் பெறுகின்ற விஞ்ஞானம், கணிதவியல், அளவையியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ளலாம். இவைகள் மனதிற்கு கருத்து படிவங்களைத் தருபவைகளாகும்.
  2. பௌதீக விஞ்ஞானம் பௌதீகவியல், இரசாயனவியல், நிலஅமைப்பியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புபட்டதுடன் விதிவிலக்கற்ற நிபந்தனைக்குட்பட்ட பரிசோதனை முறைமைகளைக் கொண்டவைகளுமாகும்.
  3. உயிரியல் விஞ்ஞானம்; தாவரவியல், விலங்கியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் தாவரங்கள், விலங்குகளின் வாழ்க்கை என்பவற்றுடன் தொடர்புடைய பரிசோதனை முறையாகும்.
  4. சமூக விஞ்ஞானங்கள் சமூகவியல், பொருளியல், அரசியல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் சமூக இயல்புள்ள மனிதனுடன் தொடர்புடையதாகும்.
இவ்வாறாயின், அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானமாக விபரிக்க அல்லது மதிப்பளிக்க முடியுமா? என்ற வினா பின்வரும் காரணங்களினால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
விஞ்ஞானம் தனக்குரிய கலைச் சொற்களையும், துல்லியமான வரைவிலக்கணங்களையும் கொண்டுள்ளது. அரசியல் விஞ்ஞானமும் தனக்குரிய கலைச் சொற்களாகிய சுதந்திரம், சமத்துவம், உரிமைகள், நீதி, ஜனநாயகம், சட்டஆட்சி, சோசலிசம் போன்றவற்றினைக் கொண்டிருப்பினும், துல்லியமான சொற்களையும் வரைவிலக்கணங்களையும் கொண்டிருக்கவில்லை. இச்சொற்களுக்கு வௌவேறு எழுத்தாளர்கள் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். இது ஏராளமான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இடத்தில் வாழும் மக்களுக்கும், பிறிதொரு இடத்தில் வாழும் மக்களுக்குமிடையில் காணப்படும் பழக்கவழக்கங்கள், மனஉணர்ச்சி, மனநிலை, சுபாவம் போன்றவற்றின் விளைவால் சிக்கலான அரசியல் நிகழ்ச்சிகள் உருவாகின்றன. இதனால் மக்களுடைய நடத்தைகளுக்கு நிலையான விதிகளை உருவாக்க முடியாது. உதாரணமாக வாக்காளர்களின் வாக்களிப்பு நடத்தை, சமயம், சாதி, சமுதாயம், சமூகப் பொருளாதாரநிலை, வர்க்கம் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக முறைக்கும், பிரித்தானிய ஜனநாயக முறைக்கும் இடையில் வேறுபாடுள்ளதை அவதானிக்கலாம்.
அரசியல் விஞ்ஞானிகளின் பெரும்பாலான வாசகங்கள் பொதுக்கருத்தின் அடிப்படையிலானதாகவே இருக்கின்றன. உதாரணமாக “அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு ஜனநாயகம் மிகச் சிறந்ததாகும்” என்பது பொதுக்கருத்திலான வாசகமாகும். எவ்வாறாயினும், பொதுவான கருத்தினைப் பலப்படுத்துவதற்கு ஒப்பீட்டு ஆய்வினை நாம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்தான் ஜனநாயகம் பற்றி எம்மனதில் ஏற்பட்ட எண்ணத்தினைப் பலப்படுத்த அல்லது நிரூபிக்க முடியும். உண்மை யாதனில் எமது வாசகங்களில் விஞ்ஞான விசாரணைக்குத் தேவையான நிபந்தனையாகிய புலன்களால் அறியக் கூடிய தன்மை இல்லாமல் உள்ளது. எனவே ஒப்பீடு என்பதும் சரி நுட்பமான ஒழுங்;குமுறைக்குட்படாததாகலாம்.
அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய கல்வி குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களாக மக்கள் உள்ளனர். மாபெரும் சிந்தனையாளர்களும், கோட்பாட்டாளர்களும் சில அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தமது மனக்கருத்துக்களை ஆதரித்து அல்லது எதிர்த்து கூறுகின்றார்கள். உதாரணமாக “புரட்சிகள்” மாபெரும் நிகழ்வு எனச் சிலர் கூறுகின்ற போது சிலர் அவற்றை “எதிர்புரட்சி” எனச் சிறப்பு பெயரிடுகின்றனர்.
மேற்கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பரசோதனைக்குட்படுத்துவது சிரமமானதாகும். அரசியல் விஞ்ஞானிகளின் முடிவுகளைப் பரிசோதனைக்குட்படுத்த முடியாது. பரிசோதனை செய்வதற்கு கருவிகள், இயந்திரங்கள், ஆய்வு கூடங்கள் எதுவும் இருப்பதில்லை. இதேபோல் அரசியல் கோட்பாடுகள் கூறும் முடிவுகளும், எதிர்வு கூறுதல்களும் இவைகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து எழுதப்பட்;டவைகளல்ல. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பெருமளவிலான எழுத்தாளர்கள் இக்கற்கை நெறியை விஞ்ஞானக் கற்கைநெறி என அழைப்பதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஜே.எஸ்.மில் இக்கற்கை நெறியிலுள்ள விஞ்ஞானப் பண்புகள் தொடர்பாகச் சந்தேகம் வெளியிட்டிருந்தார். பக்கிள் (Buckle) “தற்கால அரசு பற்றிய அறிவு, அரசியல் என்பன விஞ்ஞானத்திலிருந்து வெகு தூரத்திலுள்ளதுடன், எல்லாக் கலைகளுக்கும் பி;ன் நோக்கியதாகவும் இருக்கின்றது” எனக் கூறுகின்றார். முறைகளையும், முறைமையில்களையும் பயன்படுத்துதல் தொடர்பாக எழுத்தாளர்களிடமுள்ள உடன்பாடின்மை, இக்கற்கை நெறி தொடர்பான முடிவுகள், கொள்கைகள் தொடர்பாக பொதுவான உடன்பாடுகள் குறைவாக இருத்தல், இக்கற்கையின் அபிவிருத்தியில் தேவைப்படும் தொடர்ச்சி, சரிநுட்பமான எதிர்வு கூறல்களை உருவாக்குவதற்கு தகவல்களை வழங்குவதிலுள்ள தோல்வி போன்றவற்றின் அடிப்படையில் பிரான்சிய அறிஞர் அகஸ்ட் கொம்ட் அரசியலை விஞ்ஞானம் என அழைப்பதை நிராகரித்தார். 1920ஆம் ஆண்டு பிரைஸ் (Bryce) பிரபு “ஆழமாகவும் கவனமாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பினும் விஞ்ஞானப் பாடநெறிகளாகிய தாவரவியல் அல்லது இரசாயனவியல் அல்லது இயந்திரவியல் போன்று அரசியல் ஒரு விஞ்ஞானமாக வருவது சாத்தியமற்றது” எனக்கூறுகின்றார்.
இவ்வகையில் அரசியல் விஞ்ஞானத்தினை விஞ்ஞானக் கல்விக்குரிய பாடங்களுடன் வகைப்படுத்துவது முடியாததாகும். ஆனால், சமூக விஞ்ஞானங்கள் என்ற வடிவத்துக்குள் இதனை உள்வாங்குவதற்கு ஆழமான முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள் இருபதாம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பெருமளவிற்கு மாறியுள்ளது. இதனைப் பின்வரும் வகையில் தொடர்புபடுத்திக்காட்ட முடியும்.
உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுகள் ஆழமான அனுபவ அரசியல் கோட்பாடுகள் எழுச்சியடைவதற்கு முன்னின்றன. பொதுக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு “ஜனநாயகம், அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு சிறந்ததொரு முறை”, “மக்களினுடைய சுதந்திரத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வலுவேறாக்கம் அவசியமாகின்றது”. “நியமன அங்கத்தவர்களை விட தேர்தல் மூலம் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுதல் சிறப்பானது”, “சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் கடமையாற்றுவதற்கு நீதிபதிகள் நிரந்தர சேவைக்காலத்தினைக் கொண்டிருக்க வேண்டும்”, “ஜனநாயக முறைமைக்கான சிறந்த கல்வி தேர்தலாகும்” போன்ற மறுக்க முடியாத பல உண்மைகளை முடிவுகளாக எடுக்க முடிகின்றது.
பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், போன்ற தெளிவான பண்புகளைக் கொண்ட விஞ்ஞானப் பாடங்கள் உள்ளன. அதேநேரம் வானிலை ஆய்வு போன்ற தெளிவில்லாத பண்புகளைக் கொண்ட விஞ்ஞானப் பாடங்களும் உள்ளன. அவ்வாறாயின் அரசியல் விஞ்ஞானத்தினை பௌதீக, உயிரியல் விஞ்ஞானங்களுடன் ஒப்பிட முடியாது. அதேநேரம் வானிலை ஆய்வுடன் ஒத்த தன்மைகள் சில இருக்க முடியும். மேலும், இக்கற்கை நெறியிலுள்ள சில விதிகள் அனுபவ விசாரணைக்குட்பட்டவைகளாக இல்லாதிருக்கலாம். சில விதிகள் பரிசோதனைக்குட்பட்டவைகளாக இருக்கலாம். அரசின் இலக்கு “அதன் மக்களுக்கு நல்ல வாழ்க்கையினை உத்தரவாதப்படுத்துவதாகும்” என்ற அரிஸ்டோட்டிலின் விதியினை அனுபவபூர்வமாக பரிசோதிக்க முடியாமலிருக்கலாம். ஆனால், “சமத்துவமின்மை புரட்சிகளுக்கு காரணமாகின்றது” என்ற இவருடைய விதியை சிலவேளை பரிசோதிக்கலாம்.
விஞ்ஞானம் சிறப்பான எதிர்வு கூறல்களை முன்வைக்கின்றது. அரசியல் விஞ்ஞானம் இவ்வாறான சிறப்பான எதிர்வு கூறல்களை முன்வைப்பதில்லை. எனவே இதனை விஞ்ஞானக் கற்கை எனப்பட்டியல்படுத்த முடியாது. ஆனால் வேறுபட்ட பல்வேறு வழிகளில் அரசியல் விஞ்ஞானம் கற்கப்பட்டது. இயற்கை விஞ்ஞானத்தின் சிறப்பு சமூக விஞ்ஞானத்திலும் இருக்கவில்லை. ஏனெனில் சமூக விஞ்ஞானம் மாறுகின்ற மனித நடத்தைகளுடன் தொடர்புபட்டதாகும். மனித மனம் அடிக்கடி மாறுகின்ற இயல்புடையதாகியதால், மனித நடத்தையினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வு கூறல்களைக் கூறமுடியாது. இயற்கை விஞ்ஞானம் வெப்பம், ஒலி போன்ற இயற்கையான விடயங்களுடன் தொடர்புபட்டதால் எதிர்வு கூறல்களை இதனால் செய்ய முடியும். ஆனால் சமூக விஞ்ஞானத்தினால் எதிர்வு கூறல்களுக்கான அடிப்படை கூறுகளை உருவாக்க முடியும் என அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. சமூக அபிவிருத்தியின் சில அடிப்படை விதிகளை ஆதாரமாகக் கொண்டு கால்மாக்ஸ், பிரட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோர்களால் முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து சோசலிசம் எழுச்சியடையும் என எதிர்வு கூற முடிந்தது. ஆகவே மாக்சிசவாதிகள் தமது எதிர்வுகூறல்களை விஞ்ஞானபூர்வமானவை எனக்கூறினர். லாஸ்வெல், டால் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள் இவ்வழியில் தமது சிந்தனைகளையும் உரிமை கொண்டாடுகின்றனர். “அரசியல் விஞ்ஞானத்தில் புள்ளிவிபரவியல் பகுப்பாய்விலான எதிர்வுகூறல் சாத்தியமானது” என வில்ஸன் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ் எல்லாக் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு சில எழுத்தாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினை ஓர் விஞ்ஞானக் கற்கையாக விபரிப்பதையே விரும்புகின்றனர். “ஹொல்ஷென்ட்ஒப்” (Holtzendoref) “அறிவின் மிகப்பெரிய வளர்ச்சியுடனான மொத்தமான எல்லா அனுபவங்கள், நிகழ்ச்சிகள். அரசு பற்றிய அறிவு போன்ற அனைத்தும் அரசியல் விஞ்ஞானம் என்ற பொதுவான தலைப்பின் கீழ் கொண்டுவரப்படுமானால் அதனை நிராகரிப்பது சாத்தியமானதல்ல” எனக் கூறுகின்றனர். அரசியல் விஞ்ஞானம் இயற்கை விஞ்ஞானமல்ல ஆனால் சமூக விஞ்ஞானமாகும். அரசியல் விஞ்ஞானம் விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டுமாக இருந்தால் நுணுக்கமாக வரையறுக்கப்பட்ட கண்டிப்பான சொற்களால் இது உச்சரிக்கப்படல் வேண்டும். அதேநேரம், வொன்மோல், பிளன்சிலி ஜெலினிக், றசன்கொபர், லூயிஸ், சிட்விக், லிபர், பொலொக், வூசி, பேகஸ் விலோபி, மைக்கல்ஸ், வெபர், மரியம், ஈஸ்ரன், லஸ்வெல், போன்ற பெரும் கோட்பாட்டாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினை ஓர் விஞ்ஞானப் பாடநெறியாக அழைப்பதே சரியானது என வலியுறுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும், சமூக விஞ்ஞானம் ஒவ்வொன்றும் விதிமுறைப்படியான பண்புக் கூறுகளுடன் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இவைகளைத் தூய விஞ்ஞானம் மற்றும் துல்லியமான விஞ்ஞானம் என மாற்றமுடியாது. இது அரசியல் விஞ்ஞானத்திற்கும் பொருந்தும். மனித வாழ்க்கைக்கான விதிமுறைகள், இலக்குகள், விழுமியங்கள் தொடர்பான பண்புகள் அரசியல் கற்கையிலும் காணப்படுகின்றன. இவ்வடிப்படையில் பார்க்கின்றபோது அரசியல் விஞ்ஞானத்தினைத் தூய விஞ்ஞானமாகவன்றி சமூக விஞ்ஞானமாகவே கருதமுடியும்.

இறைமை

அரசறிவியலில் மிகவும் அடிப்படையான ஒரு எண்ணக்கருவாக இறைமை விளங்குகின்றது. ஆயினும் இதன் பண்புகளைத் தெளிவாக்குவதிலும் வரையறை செய்வதிலும் சிக்கல்களும் கருத்து முரண்பாடுகளும் தொடர்ந்து ஏற்படுகின்றன.

இறைமை என்ற பதம் பிரான்சிய சொல்லாகிய Soverainete என்பதிலிருந்தும், இலத்தீன் சொல்லாகிய Supremitas என்பதிலிருந்தும் தோற்றம் பெற்றதாகும்.
இறைமை என்பது அரசொன்றின் மிகவும் அடிப்படையான மூலக்கூறாகும். அத்துடன் அரசு கொண்டிருக்க வேண்டிய அதிகாரங்களை வெளிப்படுத்தும் பதமுமாகும். இதனால் மிகவும் நேரடியான கருத்தில் ஒரு அரசு கொண்டிருக்க வேண்டிய மிக உயர்ந்த அதிகாரம் (Supreme Power) அல்லது மேலான அதிகாரம் என்பதை உணர்த்தும் பதமாக இறைமை அரசறிவியலில் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு இறைமை என்பது அரசினுடைய மேலான அதிகாரம் என்பதும் அரசின் அடிப்படையான மூலக்கூறு என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
வரைவிலக்கணங்கள்
வில்லோபி (Willoughby) என்பவர் “ஓர் அரசினுடைய உயர்ந்த விருப்பமே இறைமை” என வரையறை செய்கின்றார். வூட்றோ வில்சன் (Woodrow Wilson) என்பவர் “ஓர் அரசு சட்டங்களை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமே இறைமை” என வரையறை செய்கின்றார். பேகஸ் (Burgess) என்பவர் “ஓர் அரசு தனது மக்களின் மீதும் அம்மக்களின் நிறுவனங்களின் மீதும் செலுத்துகின்ற சுயமானதும் நிறைவானதும் எல்லையற்றதுமான அதிகாரமே இறைமை” என வரையறை செய்கின்றார்.
இவ்வரைவிலக்கணங்கள் இறைமை என்ற பதம் ஒரு அரசு கொண்டிருக்கும் சட்டவாக்கம், அமுலாக்கம், நீதிபரிபாலனம் ஆகிய அதிகாரங்கள் அவற்றின் மேலாண்மை போன்றவற்றையே கருத்தில் கொள்கின்றன.
இறைமையின் வேறுபட்ட தன்மைகள்:
இறைமை என்ற பதம் அரசறிவியலில் வெவ்வேறுபட்ட தன்மைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில் உள் இறைமை (Internal Sovereignty) இவெளி இறைமை (External Sovereignty), பெயரளவு இறைமை (வுவைரடயச (Titular Sovereignty) சட்ட இறைமை (Legal Sovereignty) அரசியல் இறைமை (Political Sovereignty) மக்கள் இறைமை (Popular Sovereignty) பன்மை இறைமை (Pluralistic Sovereignty) என்பன முதன்மையானவைகளாகும்.
உள் இறைமை (Internal Sovereignty)
உள் இறைமை என்பது ஒரு அரசு தனது மக்கள் மீதும், பிரதேசத்தின் மீதும் செலுத்தும் அதிஉயர் அதிகாரமாகும். அரசு ஒன்றின் எல்லைக்குள் உள்ள தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்டவர்கள் அங்கத்துவம் வகிக்கும் நிறுவனங்கள் மீது அரசு முழு நிறைவான (Absolute) அதிகாரத்தினைச் செலுத்துவதை குறித்து நிற்கின்றது. அரசு முழுநிறைவானதாக இருப்பதுடன் அதன் எல்லைக்குள் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் கட்டளைகளை பெற்றுக் கொள்ளாததுமாக இருக்க வேண்டும். அரசை எதிர்க்கக் கூடிய மனிதர்கள் அல்லது நிறுவனங்கள் அரசின் எல்லைக்குள் தோற்றாததுடன் அவற்றை அழிப்பதற்குமான உயர் அதிகாரமும் அரசிடம் இருப்பதை உள்இறைமை குறித்து நிற்கின்றது.
வெளி இறைமை (External Sovereignty)
வெளி இறைமை என்பது ஒரு அரசு உலகத்திலுள்ள வேறு எந்த ஒரு அரசின் தலையீPடோ அல்லது கட்டாயப்படுத்தலோ இன்றி சுதந்திரமாகச் செயற்படுதலைக் குறித்து நிற்கின்றது. ஒரு அரசு தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி சர்வதேச ஒப்பந்தங்கள் கூட்டுக்கள் அல்லது சர்வதேச சட்டங்களுக்கு உட்படுகின்ற போது அதன் இறைமை பறிக்கப்படக் கூடாது. இவைகள் அரசு ஒன்றிற்குரிய சுய வரையறைகள் என விபரிக்கப்படுகின்றன. மக்களைக் கட்டாயப்படுத்துகின்ற அதிகாரம் அரசிற்கு வெளியே யாரிடமும் காணப்படமாட்டாது. மக்கள் தமது மகிழ்ச்சிக்காக தாம் வாழும் அரசிற்கு மட்டுமே கீழ்ப்படிவார்கள். ஏனைய சமூகங்கள் ஒரு அரசு சுதந்திரமாக எதிர் கொள்கின்றது. அரசு தனது சொந்த விருப்பத்திற்கு இணங்க செயற்படும். ஏனைய வெளி அதிகாரத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டியதில்லை. ஒரு அரசின் இறைமையினை கட்டுப்படுத்த முடியாது என்பதுடன், பிரிக்கவும் முடியாது. இறைமை பிரிக்கவோ கட்டுப்படுத்தவோ முற்படின் இறைமையானது அழிக்கப்பட்டுவிடும். இறைமை அரசின் ஒரு பகுதி என்பதுடன் ஒவ்வொரு அரசும் இறைமையினை இழந்து விடாமல் இருக்க வேண்டும். Gettell என்பவர் இது தொடர்பாகக் கூறும் போது இறைமை முழமையானதாக இல்லாவிட்டால் அரசு நீடித்து வாழ முடியாது. இறைமை பிரிக்கப்பட்டால் ஒன்றிற்கு மேற்பட்ட அரசுகள் தோற்றம் பொதுச் சட்ட ரீதியான அதிகாரம் இங்கு இல்லாமல் போகும் போது அரசின் இறைமை பின்னடைவினை சந்திக்கும். இறைமையின் வியாபகத்திற்கு சட்ட ரீதியான தடை இருக்கக் கூடாது என்கின்றார்.
பெயரளவு இறைமை (Actual and Titular Sovereignty)
பெயரளவு (Titular) இறைமை என்பது இறைமையானது உண்மையில் நடைமுறையில் இருக்காத நிலையினைக் குறித்து நிற்கின்றது. இங்கு இறைமை என்ற பதம் அரசன் அல்லது மன்னன் அரசின் மிக உயர்ந்த அதிகாரம் உடையவனாகக் கருதப்படுவான். ஆனால் இது உண்மையானதல்ல. அரசனுடைய முழு நிறை அதிகாரம் என்பது இன்று முடிவடைந்து விட்டது. இன்று ஜனநாயகம் எல்லா நாடுகளிலும் நிலை பெற்றுள்ளது. இதனால் அரசன் இன்று அரசாங்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன் அரசனிடம் இறைமை என்பதும் இருப்பதில்லை. அரசன் அரசாங்க இயந்திரத்தின் ஒரு பகுதியாகும் பொழுது அவர் இறைமையினன் பெற்று விடுவதில்லை. பதிலாக அரசாங்கத்தின் உதவியாளராகவும் சேவகராகவும் செயற்படுகின்றார். மக்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தினை உருவாக்கி அவர்களே உண்மையான இறைமையாளர்களாகின்றனர். அரசன் பெயரளவில் மட்டுமே இயங்குகின்றார். உதாரணமாக பிரித்தானிய இராணியினையும் பாராளுமன்றத்தினையும் குறிப்பிடலாம்.
மக்கள் இறைமை (Popular Sovereignty)
மக்கள் இறைமை என்பது மக்களுக்குரிய அடிப்படையானதும் பிரிக்க முடியாததுமான இறைமையாகும். மக்கள் இறைமையானது 16ம், 17ம் நூற்றாண்டுகளில் அரசனின் கொடுங்கோண்மை அதிகாரத்திற்கு எதிராக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய பொழுது எழுச்சியடைந்ததாகும். ரூசோ (Rousseau) மக்கள் இறைமையின் பிரச்சாரராகக் கருதப்படுபவராகும். இவருடைய கோசம் பிரான்சியம் புரட்சிக்கு காரணமாகியிருந்ததுடன் அமெரிக்கப் புரட்சிக்கும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பிறைஸ் (Bryce) என்பவர் இது தொடர்பாக கூறும் போது மக்கள் இறைமை ஜனநாயகத்;தின் காவல் மதமும் அடிப்படை மதமுமாகும் என்கின்றார்.
மக்கள் இறைமையானது தேர்தல் தொகுதி அல்லது வாக்காளர் இறைமையாகவே கருதப்படுகிறது. ஆனால் தேர்தல் தொகுதி இறைமையானது அரசியலமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்படாதவரை இது சட்ட தீதியானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாக்காளர்கள் இறைமை அதிகாரத்தை தாங்களாக அனுபவிப்பதில்லை. பதிலாக அவர்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றார்கள். பிரதிநிதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கட்சி சட்டசபை பொறுப்பினை ஏற்றுக் கொள்வதுடன் சட்ட சபை ஊடாக இறைமை அதிகாரத்தினைப் பிரயோகிக்கும் மக்கள் இறைமை என்பது பெரும்பான்மை வாக்காளாகளின் அதிகாரத்தினால் வெளிப்படுத்தப்படுவதாக இருக்கும். இதற்காக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகின்றது.
ஆனால் மக்கள் தமது இறைமையினைப் பிரயோகிப்பதற்காகப் பயன்படுத்தும் வாக்குரிமை தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இறைமை பற்றிய கோட்பாடுகள்
இறைமை பற்றிய கோட்பாடுகளைக் காலத்திற்குக் காலம் பல அரசறிவியலாளர்கள் முன் வைத்துள்ளார்கள். இவர்களின் இறைமை பற்றிய கோட்பாடுகளுக்குள் அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலையின் தாக்கம் பிரதிபலித்திருந்தன. இவ்வகையில் Jean Boadin, Hobbes, Locke, Rousseau, Austin, Grotics, Hegel, John Milton, Laski, Maciver, Maine என இவர்களைப் பட்டியல்படுத்த முடியும்.
ஜீன் போடினின் இறைமை பற்றிய கோட்பாடு
ஜீன் போடின் 1530 – 1596 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த அரசியலறிஞராகும். இறைமை பற்றிய கோட்பாட்டாளர்களுள் காலத்தால் முந்தியவராக இவர் கருதப்படுகின்றார். 1576ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசு (Republic) என்ற நூலில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை இவர் முன்வைக்கின்றார். ||போடினின் கருத்துப்படி இறைமை என்பது மக்கள் மீதும், குடிகள் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்விதமான சட்டங்களினாலும் தடை செய்யப்படாத மிக உயர்ந்த அரசின் அதிகாரமே இறைமை எனக் கூறுகின்றார்.
இறைமையின் உறைவிடமாக தனிமனிதனையே Boadin குறிப்பிடுகின்றார். Boadin பலரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ இறைமை உறைவதை நிராகரிக்கின்றார். அரசு என்பது மக்கள் குடும்பங்களினதும், மக்கள் சொத்துக்களினதும் இணைப்பாகும். இவ் அரசு இறைமை அதிகாரத்தினடிப்படையில் ஆட்சி புரியப்பட வேண்டும். ஒரு அரசில் சட்டங்களை உருவாக்குவதும் அதனை அமுலாக்குவதும் அரசின் இறைமையே ஆகும். இதனால் சட்டங்களின் உற்பத்தி மையம் இறைமையேயாகும். இதனால் சட்டத்தினை விட இறைமை உயர்வானதாகும். ஆயினும் சமுதாயக் கடமை, சமூகம் பொறுப்பு சமுதாய நீதி, சர்வதேசச் சட்டம் என்பவற்றினை விட இறைமை உயர்ந்ததல்ல என்ற கருத்தினை Boadin முன்வைக்கின்றார். Boadin இறைமையின் பிரயோகத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றார்.
1) சில அடிப்படையான சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இறைமையாளனுக்கு அதிகாரமில்லை.
உ-ம் பிரான்சின் சாலிக் சட்டம் (Salic law of France)
2) தனியார் சொத்துடைமை என்பது சட்டத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டதாகும். இதனால் பலாத்காரமான முறையில் மக்களின் சம்மதமின்றி மன்னன் வரி விதிக்கவோ அல்லது அவற்றை அழிக்கவோ முடியாது.
இறைமை என்பது மக்களின் மீதும் குடிகளின் மீதும் செலுத்தப்படுகின்ற எவ்வித சட்டங்களுக்கும் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என்று Boadin முன் வைக்கும் இறைமை பற்றிய கருத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுப்பாடுகளும் முரண்பாடுகளை கொண்டுள்ளன. இது Boadin இற்குள் காணப்பட்ட முரண்பாட்டினை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.
Boadin இறைமை பற்றிய கோட்பாட்டினை முன்வைப்பதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை பெரும் பங்களிப்பு செய்திருந்தது. இவர் வாழ்ந்த காலப்பகுதியில் பிரான்சில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றிருந்தது. இதனை விரும்பாத Boadin அதிகாரம் மிக்க மன்னன் ஒருவனாலேயே இக்குழப்பம் மிகுந்த சூழ்நிலையினை முடிவுக்கு கொண்டு வர முடியும் என நம்பியிருந்தார். உறுதி ஐக்கியம் அமைதி என்பன ஒரு சமுதாயத்தில் பலம் வாய்ந்த மன்னனொருவனின் மூலமே அடையப்படுவது சாத்தியமானதாகும். இதனால் இறைமையின் உறைவிடமாகத் தனிமனிதனான மன்னன் விளங்க வேண்டும் என்பது Boadin வாதமாகும். உண்மையில் பிரான்சில் இடம் பெற்றிருந்த சிவில் யுத்தத்தின் வெளிப்பாடே Boadin இறைமை பற்றிய சிந்தனையாகும். இந்நிலையில் சிவில் யுத்தங்களுக்குத் தீர்வினையும் சமுதாய மீட்சியையும் வேண்டி நின்ற Boadin தனிமனித இறைமை பற்றி சிந்தித்திருந்தார். இதனாலேயே Boadin முழுநிறை முடியாட்சியை வலியுறுத்தியிருந்தார்.
Boadin இறைமை என்பது எவ்வித சட்டங்களுக்குக் கட்டுப்படாத மிக உயர்ந்த அதிகாரம் என வாதிட்டாலும் இறைமையானது தெய்வீகச் சட்டம,; இயற்கைச் சட்டம், சர்வதேசச் சட்டம் போன்றவற்றிற்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் வாதிடுகின்றார். இது இறைமை தொடர்பாக அவரிடம் காணப்பட்ட அக முரண்பாட்டினை வெளிப்படுத்தியது. Boadin காலத்தில் தெய்வீகச் சட்டம் இயற்கைச் சட்டம் சர்வதேசச் சட்டம் போன்ற யாவும் பெருமளவிற்கு ஒன்றிலிருந்து வேறுபடுத்தப்படாமலிருந்துடன் சாராம்சத்தில் தெய்வீக நீதி என்ற மதச் சிந்தனையுடன் பிணைக்கப்பட்டதாகவேயிருந்தது. இக்காலத்தில் முதன்மை பெற்றிருந்த கிறிஸ்தவ மதம் சார்ந்த சிந்தனைகளாகவே தெய்வீக நீதியும் விளங்கியிருந்தமையால் பாப்பரசரின் கட்டளைகளுக்கு இறைமை கட்டுப்பட்டிருக்க வேண்டிய தேவை இருந்தது. இச்சூழ்நிலையின் தாக்கமே இறைமை தொடர்பான இவரின் அகமுரண்பாட்டிற்கு காரணமானதால் தனிமனித இறைமை அவனது பூரணத்துவம் தொடர்பாக Boadin சிந்திக்கின்றார்.
தோமஸ் கொப்ஸ்  இறைமை பற்றிய கோட்பாடு
Boadin போன்று Hobbes தனது இறைமை பற்றிய கருத்தினை முன்வைப்பதற்கு அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை பெரும் பங்களிப்புச் செய்திருந்தது. 1588 – 1679 காலப்பகுதியில் இங்கிலாந்தில் Hobbes வாழ்ந்திருந்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதியில் இங்கிலாந்தில் சிவில் யுத்தம் நடைபெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்தில் உறுதியானதும் ஸ்திரமானதுமான அரசியல் சமுதாயம் நிலவவில்லை. இதனால் உறுதியான அரசியல் சமுதாயத்தினை உருவாக்கும் நோக்கில் அதிகாரம் படைத்த தனிமனித இறைமையாளனின் அவசியத்தை Hobbes வலியுறுத்த முற்பட்டார். Hobbes இன் 15 வயதில் ஆட்சி செய்த 1ஆம் ஜேம்ஸ் அவரது மகன் 1ஆம் சாள்ஸ் ஆகியோர்களின் திறமையற்ற தலைமைத்துவத்தினாலும் பொருளாதார செலவீனங்களின் மத்தியில் நடத்தப்பட்ட யுத்தங்களினாலும் இங்கிலாந்தின் நிதி நிலைமை மோசமடைந்ததுடன் குழப்பமான சமுதாயமாக இங்கிலாந்து மாறியிருந்தது. Hobbes கிடைத்த இவ் அனுபவம் பலம் வாய்ந்த மன்னர்கள் பற்றிய சிந்தனையினை Hobbes க்கு கொடுத்திருந்தது.
மனிதன் சுயநலம் மிக்கவன் விலங்கு வாழ்க்கை வாழ்பவன் என்ற தனது சிந்தனையின் அடிப்படையில் இறைமை பற்றிய கோட்பாட்டினை Hobbes வடிவமைக்கின்றார். 1642 இல் இவரால் வெளியிடப்பட்டிருந்த Decive என்ற நூலின் மூலமாக இறைமை பற்றிய கோட்பாடு வெளியிடப்பட்டிருந்தது. Hobbes இன் கருத்துப்படி “நிபந்தனை எதுவுமின்றி மக்கள் தமது அதிகாரங்களை மன்னனிடம் ஒப்படைத்து விடுகின்றார்கள். இவ்வாறு மக்களிடமிருந்து அதிகாரம் பெற்ற மன்னனே இறைமையின் உறைவிடம் என்றும் அதனால் அந்த மன்னனே சகல அதிகாரங்களும் கொண்டவனாக அச்சமுதாயத்தில் விளங்குவான்” என்றும் Hobbes கூறுகின்றார்.
சமூக பொருளாதார, அரசியல் அதிகாரங்களை தனிமனிதனான மன்னனிடம் ஒன்று குவிப்பதன் மூலம் முழு நிறைவான இறைமையாளனாக மன்னரைக் காணுகின்றார். இறைமையின் உறைவிடமாகிக மன்னனிடம் இருக்கும் இறைமை ஏனையவர்களிடம் பிரிக்கப்படுவதை Hobbes வரவேற்கவில்லை. மன்னனுடைய ஆட்சி கொடுங்கோண்மையானதாக இருப்பினும் அதனை மக்கள் மாற்றக் கூடாது என Hobbes கூறுகின்றார். இங்கு மதமோ, சமுதாய ஒழுக்கமோ மன்னனுக்கு மேலானதாகக் காணப்பட மாட்டாது. இதனால் சகல அதிகாரங்களும் கொண்டவனாக தனிமனித இறைமையாளன் காணப்படுவான். Hobbes இன் நோக்கில் இறைமையானது முழு நிறைவானது, சர்வ வல்லமையுடையது, நிரந்தரமானது, சர்வவியாபகம் கொண்டது. பிரிக்க முடியாதது ஆகும். முடிவாக சமூகக் கட்டளை ஒன்றை நடைமுறைப்படுத்தப்பலமான அதிகாரம் ஒன்றின் முன் தேவையினை உணர்ந்த Hobbes இறைமையின் முழுமைத் தன்மையினை (Absoluteness) தன் கோட்பாட்டால் ஆழமாக வலியுறுத்தி வரம்பற்ற முடியாட்சியினை (Absolute Monarchy) ஆதரித்து நிற்கின்றார்
ஜோன் லொக்கின் இறைமை பற்றிய கோட்பாடு
ஜோன் லொக் 1632 – 1704 காலப்பகுதியில் இங்கிலாந்தில்; வாழ்ந்திருந்தார். 1642 ஆண்டிலிருந்து பிரித்தானிய மன்னனுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளை அனுபவித்திருந்ததுடன் 1688 ம் ஆண்டு பிரித்தானியாவின் “மகோன்னதப் புரட்சியையும்” (Glorious Revolution in Britain) அனுபவித்திருந்தார். இவ் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 1690 ம் ஆண்டில் அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள் (Two Treatises of Government) என்ற நூலை வெளியிட்டார். இந்நூலில் இறைமை பற்றிய ஆய்வினை Locke மேற்கொண்டார். இங்கு இறைமை பற்றி Locke கூறும் போது
இறைமை மக்களிடமும் மன்னனிடமும் காணப்படும். சட்டவாக்கம் அதிகாரம் மக்களிடம் இருக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். மக்களின் விருப்பத்தை மீறி ஆட்சி செய்ய அரசனுக்கு அதிகாரம் கிடையாது. மக்கள் விரும்பும் போது அரசாங்கத்தை மாற்றியமைக்க முடியும் எனக் கூறுகின்றார்.
இங்கு உயர்ந்த அதிகாரத்தின் உறைவிடமாக மக்களையும் சகல அதிகாரங்களினதும் பிரிக்க முடியாத மூலகங்களாக மக்களே விளங்குகின்றார்கள் என்பதையும் Locke முதன்மைப்படுத்துகின்றார்.
மக்களினால் அமைக்கப்பட்ட சட்டத்துறை உயர்வான அமைப்பாக விளங்கினாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அதன் மேலாண்மை பேணப்பட முடியாது என்பதை லொக் ஏற்றுக் கொள்கின்றார். இதனால் சட்டத்துறை செயலிழக்கும் போது உயர் அதிகாரத்தின் உறைவிடத்தின் மறு பகுதியாகிய மன்னன் உயர்வானவனாக காணப்படுவான் என்ற கருத்தினை முன்வைக்கின்றார். சட்டத்துறை உயர் அதிகாரம் கொண்ட அமைப்பாகிய போதிலும் அதனுடைய உயர்வுத் தன்மை முதன்மையானதல்ல. சில நோக்கங்களுக்காக மக்களினால் அமைக்கப்பட்ட சட்டத்துறை மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருக்கும் என்றும் Locke கூறுகின்றார்.
உயர்ந்த அதிகாரத்தின் ஊற்று மையமாக மக்களே விளங்குகின்றனர். மக்கள் இறைமையினை வலியுறுத்துவதே லொக்கின் நோக்கமாகும். உயர்ந்த அதிகாரம் யாரிடம் இருந்தாலும் அது மக்கள் குரலுக்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். சட்டம் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. சட்டத்தின் முன் சகலரும் சமம் இவ்வகையில் அரசனும் சமூகத்தின் ஓர் அங்கத்தவன் என்ற வகையில் சட்டத்தின் முன் அரசனும் சமமானவனாகும். அரசாங்கம் என்பது உயர் அதிகாரம் கொண்ட மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பு என்ற முடிவுக்கு Locke வருகின்றார்.
ரூசோ  இறைமை பற்றிய கோட்பாடு
ரூசோ 1712 – 1778 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த சிந்தனையாளராவார். இவர் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள் அரசு தோன்றுவதற்கு முன்னர் பொது நல நோக்கம் கொண்டவர்களாகவும் முன்னேற்றமடைந்தவர்களாகவும் மாறிவிட்டனர் என்ற கருத்தின் அடிப்படையில் மக்கள் அரசியலதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ள தகுதியானவர்கள் என்ற முடிவிற்கு வருகின்றார். இதனடிப்படையில் இறைமை பற்றிய தனது கோட்பாட்டினை ரூசோ முன்வைக்கின்றார்.
இறைமை தொடர்பாக ரூசோ கூறும் போது இறைமை என்பது அரசின் மேலான அதிகாரமாகும். இவ் இறைமை முழு நிறைவானதும் நிச்சயமானதும் பிரிக்க முடியாததும் பாரதீனப்படுத்தப்பட முடியாததும் ஐக்கியமானதும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட முடியாததுமாகும் எனக் கூறுகின்றார்.
ரூசோ இவ் இறைமையின் உறைவிடமாகப் “பொது விருப்பத்தையும்” (General Will) மக்களையுமே காண்கின்றார். இங்கு பொது விருப்பு என்பது சமுதாயத்தின் பொது நன்மை என்பதாகவே கருதப்படுகின்றது. மாறாக எல்லோருடைய எல்லா விருப்பங்களையும் குறித்து நிற்கவில்லை. பொது நன்மையை விரும்பும் தனிநபர்களின் இணைப்பு பொது விருப்பமாகக் கொள்ளப்படுகின்றது. இவ் பொது விருப்பின் பிரயோகமானது பெரும்பான்மை மக்களினால் தேர்வு செய்யப்பட்ட இறைமையாளனிடம் இருக்கும் என்பதே ரூசோவின் வாதமாகும். இவ்விடத்தில் ரூசோ இறைமை கூட்டானது அது சமுதாய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. பொது விருப்பத்தினை அடிப்படையாகக் கொண்டது. இதனால் எப்போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாதது என்று கூறுகின்றார்.
ஜோன் ஓஸ்ரின் இறைமை பற்றிய கோட்பாடு
1790 – 1859 காலப்பகுதியில் வாழ்ந்த ஜோன் ஓஸ்ரின் 1832ம் ஆண்டு “சட்டவியலுக்கான விளக்கவுரை” (Lectures on Jurispurudence) என்ற நூலை வெளியிட்டிருந்தார். இந்நூலின் மூலமாக இறைமை பற்றிய தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார். Austin கருத்துப்படி “நிர்ணயம் செய்யப்பட்ட மேலான மனிதன் ஏனைய மேலானவர்களிடமிருந்து வரும் கட்டளைகளுக்குக் கீழ்படியாமலும் அவனுடைய கட்டளைகளுக்கு சமுதாயத்தின் பெரும்பாலானோர் வழக்கமாகக் கீழ்படிவதனாலும் அந்த மனிதன் அச்சமூகத்தில் இறைமையாளனாகக் கருதப்பட வேண்டும். இம் மேலான மனிதனை உள்ளடக்கிய இச் சமூகம் சுதந்திரம் பெற்ற அரசியற் சமூகமாகும்” எனக் கூறுகின்றார்.
இக்கருத்தின் படி இறைமையின் இயல்புகளை Austin தெளிவுபடுத்துகின்றார். அதாவது இறைமையாளனின் அதிகாரம் சட்ட ரீதியாக முழுநிறைவானதும் எல்லையற்றதுமாகும். இறைமை பிரிக்கப்பட முடியாததுடன் இரண்டு நபர்களுக்கிடையில் வெவ்வேறான முறையில் செயற்படுத்தப்பட முடியாததுமாகும். இதனால் ஒருவர் ஏனையவர்களைக் கட்டுப்படுத்த முடியுமாயின் அதுவே உண்மையான இறைமையாகும்.
இறைமையின் உறைவிடம் ஆதிக்க எல்லை என்பவற்றை Austin விளக்க முற்படும் போது இறைமை என்ற உயர்ந்த அதிகாரம் ஒவ்வொரு சுதந்திர அரசியல் சமுதாயத்திற்கும் அவசியமானதாகும். இதனால் ஒவ்வொரு சமுதாயத்திலும் மிக உயர்ந்தவனாகவோ இறைமையாளனாகவோ நிர்ணயிக்கப்பட்ட ஒருவனோ அல்லது ஒரு குழுவோ இருக்க வேண்டும். எல்லா மக்களுமோ அல்லது பொது விருப்பமோ அவனை இறைமையாளன் என ஏற்க வேண்டும். இவ் இறைமையாளன் தனக்குத் தானே எல்லைகளை உருவாக்க முடியும். அவர் ஏனையவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியக் கூடாது என விளக்குகின்றார்.
ஜோன் ஓஸ்ரின் இறைமைக்கான கருத்துக்கள் மேலும் விளக்க வைக்கப்பட வேண்டும். அத்துடன் கருத்து முரண்பாடுகள் கொண்டதுமாகும். இறைமை அதிகாரம தலை சிறந்த மனிதனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறுவதன் மூலம் மக்கள் இறைமை என்ற கருத்துடன் Austin முரண்படுகின்றார். இவருடைய சிந்தனை முடியாட்சிக்கு பொருத்தமானதாகும். Austin முழுநிறை இறைமையினை வலியுறுத்துவதன் மூலம், அரசு என்பது சமூக நன்மையினை உயர்த்தும் வழக்கமான ஒரு கருவி என்னும் கருத்தை நிராகரிக்கின்றது.
பன்மைவாதக் கோட்பாடு (Pluralistic Concept of Sovereignty)
பன்மை வாதம் ஒப்பீட்டு ரீதியில் அரசறிவியலுக்கு புதியனவாகும். நகர அரசுகள் காணப்பட்ட கிரேக்க காலத்தில் அரசுகள் மிகவும் பலமான நிறுவனங்களாக காணப்பட்டன. மத்திய கால ஐரோப்பாவில் அரசு திருச்சபை என்பவற்றிற்கு இடையில் இறைமை தொடர்பான எவ்வித போட்டியும் ஏற்பட்டிருக்கவில்லை.
பன்மை வாதக் கோட்பாடு 19ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டதாகும். மெயிற்லன்ட (Maitland) கிராப்பி (Krabbe) மெயின் (Maine) கிளார்க் (clark) சிட்ஜ்விக் (Sidgwick) ஜி.டி.எச்.கோல் (G.D.H.Cole) பொலற் (Follett) லஸ்கி (Laski) மைக்கைவர் (Maciver) பென்தம் (Bentham) போன்ற பல கல்விமான்கள் பன்மைவாதக் போட்பாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்துள்ளனர். பன்மைவாதக் கோட்பாடு இறைமை பற்றிய ஒருமைவாத (Monistic) கோட்பாட்டிற்கு எல்லா அதிகாரங்களையும் அரசிற்குள் உட்படுத்துவதுடன் அரசிற்குள் எவ்வித சமூக நிறுவனங்களும்; அதிகாரத்தினைச் செலுத்துவதை ஏற்றுக் கொள்வதில்லை.
ஒருமைவாதக் கோட்பாட்டாளர்களாகிய Hobbes, Hegal, Austin போன்றவர்கள் முழு நிறைவான கட்டுப்படுத்த முடியாத, பிரிக்க முடியாத பாரதீனப்படுத்தப்பட முடியாத (Inalienable) அதிகாரத்தினை அரசிற்கு வழங்குகின்றார்கள். பன்மைவாதக் கோட்பாட்டாளர்களின்படி இக்கருத்துக்கள் அடிப்படையற்றதும் கற்பனையானதுமாகும். பிக்கிஸ் (Figgis) இது தொடர்பாகக் கூறும் போது மரபுரீதியான இறைமைக் கோட்பாடு போற்றுதற்குரிய மூட நம்பிக்கையாகும் எனக் கூறுகின்றார்.
பன்மைவாதக் கோட்பாட்டாளர்களின் கருத்துப்படி, அரசும் ஏனைய சமூக அமைப்புக்களும் சமூக நலன்களிற்கான நிறுவனங்களாகும். மனிதனின் சமூக இயல்பானது மதம், கலாச்சாரம், பொருளாதாரம் போன்ற வேறுபட்ட அமைப்புக்களுக்கு ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது. இவ் அமைப்புக்கள் மனிதனின் சமூக வாழ்க்கையின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்றன என்பதை பன்மைவாதிகள் எடுத்துக் காட்டுகின்றனர். சமூக நிறுவனங்களில் குடும்பம், குலம் போன்றவைகள் அரசு என்ற நிறுவனத்தினை விட பழமையானதுடன் அவற்றின் அந்தஸ்திற்கு ஏற்ப அரசிற்கு சமமான அதிகாரம் கொண்டவைகளுமாகும். ஆகவே அரசினை மட்டும் இறைமையுடைய நிறுவனமாக அங்கீகரிப்பது நீதியற்றதாகும் என்பது பன்மையாளர்களின் வாதமாகும்.
பன்மைவாதிகளில் ஒருவராகிய Laski என்பவரின் கருத்துப்படி “ஒரு அரசின் இறைமையானது பன்மைத்தன்மை கொண்டதும், அரசியல் திட்ட ரீதியானதும், பொறுப்புடையதுமாகும். மட்டுப்படுத்தப்படக் கூடிய இவ் இறைமையானது, மேலாண்மை பெறுவதை விட கட்டுப்படுத்தப்படக் கூடியது. நிரந்தரமானது என்பதை விட தேர்தல் தொகுதிகளின் விருப்பத்தினால் அது மாறுபட்டுச் செல்லும். அதன் அதிகாரங்கள் வியாபிக்கக் கூடியவை. உள்வாரியாகவும், வெளிவாரியாகவும் அதன் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தபட்டவையாகவும் மீள் பார்வைக்குரியவையாகவும் காணப்படு ம்.” எனக் கூறுகின்றார்.
பென்தம் (Benthum) என்பவர் இறைமை என்பது “சட்டத்தின் மூலம் எல்லையற்றதாகவிருந்த போதிலும் நீதி முறைப்படி எல்லையற்றதல்ல. ஒரு இறைமையாளர் தனது அதிகாரத்தைச் சட்டங்களை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நிலை நாட்டிக் கொள்ள முடிந்த போதிலும் இவ் இறைமையின் நோக்கம் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும்” எனக் கூறுகின்றார்.
சுருக்கமாகக் கூறுவோமாயின் பன்மைவாத சிந்தனையாளர்கள் அரசும் ஏனைய அமைப்புக்களும் சமூகத்தில் சில அந்தஸ்துக்களை பெற்றிருக்கின்றன. இதில் அரசு அதிக முக்கியத்துவத்தினையும் அதிக கௌரவத்தினையும் பெற்றிருப்பதை மறுக்கிறார்கள். இவர்களுக்குள் உள்ள தீவிரவாதிகள் அரசினை பூரணமாக அழிப்பதற்கும் அதனுடைய அதிகாரப் பங்கீட்டினையும் தொழிற்பாட்டினையும் அளிப்பதற்கும் ஆழமாக சிந்திக்கின்றனர். சில பன்மைவாதிகள் அராஜகத்;திலிருந்து சிறியளவிலேயே வேறுபடுகின்றனர்.
பன்மைவாதம் அரசின் இறைமை பற்றிய ஒருமைவாதக் கோட்பாட்டினை (Monistic) எதிர்க்கின்றது. பன்மைவாதிகளின் வாதத்தின்படி அரசின் இறைமையானது சமூகத்தின் ஏனைய தொண்டர் அமைப்புக்களின் மீது விஸ்தரிக்கப்பட முடியாதது. தொண்டர் அமைப்புக்கள் அரசிற்கு சமமாக தமக்கே உரிய அதிகார எல்லைக்குள் இருந்து செயற்படக் கூடியவையாகும்.
அரசு முழு நிறைவானதும் கட்டுப்பாடற்றதுமான அதிகாரத்தினை கொண்டிருக்க முடியாது. அதன் அதிகாரங்கள் சமூக வழக்காறுகள், சம்பிரதாயங்கள் சர்வதேசச் சட்டங்கள் ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் என்பவற்றினால் மட்டுப்படுத்தப்படுகின்றன. ஜனநாயக பாரம்பரியத்திற்குள் மக்கள் அபிப்பிராயம் என்பது இறைமை மீதான கட்டுப்பாடாகவே உள்ளது. மக்களுடைய உரிமைகள் கூட அரசின் அதிகாரத்தினை மட்டுப்படுத்துகின்றது. இவ்வகையில் இறைமை பிரிக்கப்பட முடியாதது என்ற கருத்து இங்கு நிராகரிக்கப்படுகின்றது. இறைமை ஒரு அரசிற்குள் செயற்படும் பல்வேறு சங்கங்களிற்கிடையிலும் அரசிற்கிடையிலும் பிரிக்கப்படுகின்றது. அரசும் ஏனைய சங்கங்களும் மக்களிடமிருந்து விசுவாசத்தினை பெற்றுக் கொள்கின்றன. இது தொடர்பாக Laski பின்வருமாறு கூறுகின்றார். “மக்கள் சில நேரங்களில் அரசை விட சங்கங்களிற்கு அதிக விசுவாசத்தினை வெளிக்காட்டுகின்றனர். மக்கள் அரசிற்கெதிரான தமது மனத்துயரங்களை கொண்டிருக்க முடியாது என்ற கருத்தினை பன்மைவாதிகள் நிராகரிக்கின்றார்கள். ஒரு நாட்டில் சுதந்திர இயக்கங்களை ஸ்தாபிக்கவும் அரசின் இ;றைமைக்கு எதிரான மனத்துயரங்களை, அதிருப்தியினை, கருத்துக்களை வெளியிடுவதற்கும் மக்களிற்கு உரிமையுள்ளது”

அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள்

மனிதன் எப்போது மற்றவர்களுடன் இணைந்து சமுதாயமாக வாழத்தொடங்கினானோ அப்பொழுதே அவனுடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது. மனிதன் ஏன் சமுதாயமாக சேர்ந்து வாழ விரும்புகின்றான். தன்னுடைய நன்மைக்காகத்தான். அவனுடைய சுயநலன் தான் பிறரை நாடத்தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வாழ்க்கை பாதுகாப்பாக நடாத்துவதற்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட வேண்டியது அவசியமாகின்றது. மனிதனையும், சமுதாய மனிதனையும், ஒருவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனுடைய அரசியல் வாழ்க்கையையும் வேறு வேறாகப் பிரிக்க முடியாது. அரசு ஒழுங்காக இயங்க வேண்டுமானால் அந்த அரசின் பிரஜைகள் அரசுக்காகச் செயற்பட வேண்டும். அவ்வாறே பிரஜைகள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் அரசு பிரஜைகளுக்காகச் செயற்பட வேண்டும். இத்தகைய பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம்தான் சமுதாய வாழ்க்கை சிறப்படையும். மேற்படி அரசும், பிரஜைகளும் பரஸ்பரம் ஒத்துழைக்காத போது சமுதாய வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது. அரசு பிரஜைகளின் நன்மைகளில் கவனம் செலுத்தாத போதும், பிரஜைகள் அரசின் செயற்பாட்டில் ஈடுபாடு காட்டாமல் வலுக்கட்டாயத்திற்காக ஆளப்படுகின்றபோதும் அரசுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் மோதல் உண்டாகின்றது. இந்த மோதலை இல்லாமற் செய்வதற்கு ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் அரசியல் விஞ்ஞான அறிவு அவசியமாகின்றது. ஆளுவோருக்குள்ள கடமையையும், ஆளப்படுவோருக்குள்ள உரிமையையும் வற்புறுத்திக்காட்டுவது அரசியல் விஞ்ஞானமாகும். மக்களையும், மக்களுடைய சொத்துக்களையும் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் கடமையாகும். மக்களைக்காப்பாற்றுவது என்பது மக்களுடைய சுதந்திரத்தையும், வாழ்க்கையையும் காப்பாற்றுவதாகும். அதாவது மக்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருப்பது அரசாங்கம். பாதுகாப்புப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமானால் மக்கள் தங்கள் நலனை அடைவதும், அரசாங்கம் தனது கடமையைச் செய்வதும் இலகுவாக அமையும். அரசாங்கம் தன்பொறுப்பை உணர்ந்து செயற்படாமல் போனால் அதற்கு அதன் பொறுப்பை உணர்த்துவது மக்களின் கடமையாகும். இதற்கு மக்களுக்கு அரசியல் விஞ்ஞான அறிவு அவசியமாகும்.
அரசியல் விஞ்ஞான கற்கை நெறி பல்வேறு கல்வியியலாளர்களாலும், பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன. அரிஸ்டோட்டில் அரசியல் என்றும், வில்லியம் கோட்வின் அரசியல் விஞ்ஞானம் என்றும், ஆர்.ஜி.கெற்ரல் அரச விஞ்ஞானம் என்றும், சேர் பிறட்றிக் பொலொக் என்பவர் ஆட்சியியல் விஞ்ஞானம் என்றும் அழைத்தனர். எவ்வாறாயினும், மிக இலகுவாகக் கூறின் அரசறிவியல் கற்கையானது அரசு, அரசாங்கம் பற்றிய கற்கை எனலாம். ஆங்கிலப் பதமாகிய Politics கிரேக்க சொற்களாகிய நகர அரசு (Polis), அரசாங்கம்(Polity), அரசியல் யாப்பு (Politeia) ஆகிய மூன்று சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கிரேக்க மொழியின் விளக்கத்தின்படி Politics என்பது நகர அரசுகள் அதன் நிர்வாகம் என்பன பற்றிய கற்கையாகும். ஆயினும், Politics என்ற பதத்தினைப் பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களையும் அவதானிக்க வேண்டும். சொற்களஞ்சியம், பாடநூல் எழுத்தாளர்கள் இதனை விஞ்ஞானமாகவும், கலையாகவும் நோக்கியுள்ளனர். இதனை விட மேலும் சில சிக்கல்கள் கோட்பாட்டாளர்களால் அதிகரித்துள்ளன. கொப்ஸ் இதனை “அதிகாரத்துடனும்”, அகஸ்ட் காம்டே “நேர்காட்சிவாதம்” என்பதுடனும் தொடர்புபடுத்தியிருந்தனர். இன்று Politics என்ற பதத்திற்கான கிரேக்க மொழியிலான கருத்து வலுவிழந்துவிட்டது.
பொதுவாக அரசியல் என்பதை அரசு, அரசாங்கம் பற்றிய கற்கை என்றே விளங்கிக் கொள்ளப்படுகின்றது. ஆனாலும், முன்னணி எழுத்தாளர்களாகிய ஜெலினெக், வில்லோபி, பொலொக் போன்றவர்கள் கோட்பாட்டிற்கும், பிரயோகங்களுக்கும் இடையிலான தனிப்பண்புகளை வரையரை செய்வதில் குழப்பங்களை உருவாக்கியுள்ளார்கள். அரசியல் கோட்பாடுகள் அரசின் இலக்கு, நோக்கங்கள், இயல்புகள், தோற்றம் பற்றிய விடயங்களை கூறுகின்றது. பிரயோகமானது, அரசாங்கத்தின் நிர்வாக விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. இன்னோர் வகையில் கூறின், அரசியல் கோட்பாடுகள் அரசின் செயற்பாடு தவிர்ந்த அடிப்படை விடயங்களை குறித்து நிற்க, பிரயோகமானது, அரசின் செயற்பாட்டு விடயங்களை அல்லது, அரசு கருத்திலெடுக்கும் இயங்கியல் நிறுவனங்களைக் குறித்து நிற்கின்றது.
அரசு என்பது பல்கூட்டு விவகாரங்களைக் கொண்டதாகும். இதனால் இது வௌவேறுபட்ட கோணங்களில் கற்பிக்கப்படுகிறது. பொருளியியலாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியளாளர்கள், வரலாற்றாசிரியர்கள், சட்டவல்லுனர்கள் போன்றவர்கள் அரசு என்பதை தாம் சார்ந்த கற்கை நெறியூடாக நோக்குகின்றனர். அரசு தன்னுள் பல்வேறு வகைப்பட்ட பண்புக்கூறுகளைக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும். சமூக விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கூறுகளும் ஒவ்வொரு விடயங்களைக் கையாள்கிறது. இவ்வாறான நிலையில் டு சப்லன் (Du Sablon) வொன் மொல் (Von Mohl) லூயிஸ் (Lewis) போன்ற பிரான்ஸிய நாட்டு எழுத்தாளர்கள் அரசியல் விஞ்ஞானம் என்ற பதத்தை பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கியிருந்தனர். இவ் அடிப்படையில் நோக்கும் போது அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறி அரசுடன் தொடர்புடைய பல பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன எனலாம்.
இன்னோர் சிக்கல் இங்கு காணப்படுகின்றது. அதாவது, அரசியல், அரசியல் விஞ்ஞானம் ஆகிய இரண்டு பதங்களினது வேறுபாடுகள், தனிப்பண்புகள் வேறுபடுத்திக்காட்டப்பட்டாலும், இவ்விரு பதங்களும் ஒன்றிற்குப் பிரதியீடாக மற்றொன்று மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. அரசியல் என்பது அரசின் பிரயோக விடயங்களைக் கூறுகின்றது. கார்ணர் இதனை பின்வருமாறு விளக்குகின்றார்.
“அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது. அல்லது பொதுவிவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடைய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரசியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, இராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட, அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது” எனக் கூறுகின்றார்.
அரசியல் விஞ்ஞானம் அரசின் தன்மை, அரசாங்கத்தின் இயல்பு, தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்கள் அரசோடு கொள்ளும் தொடர்புகள் என்பன பற்றியும் ஆராய்கின்றது. அரசியல் விஞ்ஞானம் தனியே அரசியல் ஸ்தாபனங்களை மட்டுமல்லாது அரசியல் சிந்தனைகளையும் அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியும் ஆராய்கிறது. மேலும் அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகள் பற்றி ஒப்பிட்டு ஆராய்வதோடு, நடைமுறையிலிருக்கும் அரசியல் ஸ்தாபனங்கள், சிந்தனைகள் என்பவற்றை விவரித்து, ஒப்பிட்டு, பாகுபடுத்தி விளக்கமளிக்கின்றது. மாறிவரும் சூழ்நிலை, ஒழுக்கநிலை என்பவற்றுக்கேற்ப அரசியல் சிந்தனைகள், அரசியல் ஸ்தாபனங்கள் என்பவற்றை வளர்க்கும் நோக்குடன் அரசு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்ற நோக்கில் இதன் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறுகின்றது.
அரசியல் விஞ்ஞானம் என்பது அரசின் கடந்தகாலம், சமகாலம், எதிர்காலம் பற்றியும், அரசியலமைப்பு, அரசியல் செயற்பாடுகள், அரசியல் ஸ்தாபனங்கள், அரசியல் கோட்பாடுகள், அரசியல் அதிகாரம், அரசியல் தீர்மானங்கள் பற்றிய கற்கை நெறியாகும். இது சமூகத்திலும், அரசிலும் மக்கள் தமக்குள்ள உரிமைகளையும், கடமைகளையும் உணர வைக்க உதவுவதுடன் நிருவாகிகள், அரசியல் தலைவர்கள் அல்லது உயர்ந்தோர் குழாமின் செயற்பாடுகளை அறியவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் உதவுகின்றது. மேலும் நீதித்துறை, நிருவாகம், சட்டத்துறை என்பன எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும், பொதுசன அபிப்பிராயம், வாக்களிப்பு, தேர்தல் தொகுதி நடத்தை, அரசியல் பங்குபற்றுதல் பற்றி அறியவும், ஆய்வு செய்யவும், தீர்மானங்கள் எடுத்தல், சமூகமயப்படுத்தல், தலைமைத்துவம், அரசியலில் பங்கு பற்றுதல் பற்றி ஒப்பீட்டு முறையில் கற்கவும் உதவுகின்றது. அரசியல் முறைகளையும், அரசாங்கங்களையும் ஒப்பீட்டுப் பார்த்து அவற்றின் சிறப்புகளையும், குறைபாடுகளையும் அறியவும், சர்வதேச அரசியல், நாடுகளிடையேயான தொடர்புகள், முரண்பாடுகள், வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன பற்றி அறியவும், அரசியற் கோட்பாடுகளைக் கற்பதன் மூலம் எவ்வாறு நல்லதொரு அரசியற் சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பதை அறியவும் உதவுகின்றது. எனவே, அரசியல் விஞ்ஞானம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அரசுடன் தொடர்புடைய விடயங்களாகிய அரசின்; தோற்றம், இயல்பு, அரசியல் நிறுவனங்களின் வடிவம், இயல்பு, வரலாறு பற்றிய கற்கை நெறியாகும்.